மின்கட்டண உயர்வுக்கு அ.தி.மு.க.வே காரணம் - தங்கம் தென்னரசு பேட்டி
|மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில்தான் மிக குறைந்த அளவில் மின் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
சென்னை
சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு,
"தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வுக்கு அ.தி.மு.க.வே காரணம். பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதுபோல அ.தி.மு.க. செயல்பாடு உள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்க மறுத்த உதய் மின் திட்டத்தில் தமிழ்நாட்டை இணைத்து கையெழுத்திட்டது எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான். உதய் மின் திட்டத்தில் இணைந்து, அ.தி.மு.க.பற்ற வைத்த தீதான் தற்போதைய மின் கட்டண உயர்வுக்கு காரணம். மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. போராட்டம் நடத்துவது வேடிக்கையானது.
2011-12 தி.மு.க. ஆட்சியில் 18,954 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு விட்டு சென்றோம். ரூ.1 லட்சத்து 59 கோடிக்கு மேல் கடன் மட்டுமே உள்ளது. இதற்கு வட்டியும் கட்டி வருகிறோம். நிதி சுமையை சரிகட்டவே கட்டண உயர்வு செய்துள்ளோம். அ.தி.மு.க. ஆட்சியில் பலமுறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில்தான் மிக குறைந்த அளவில் மின் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது" எனக் கூறினார்.