< Back
மாநில செய்திகள்
ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. இரு அணிகளும் போட்டி; கூட்டணி கட்சி தலைவர்களிடம் தனித்தனியாக ஆதரவு கேட்டனர்
மாநில செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. இரு அணிகளும் போட்டி; கூட்டணி கட்சி தலைவர்களிடம் தனித்தனியாக ஆதரவு கேட்டனர்

தினத்தந்தி
|
22 Jan 2023 5:23 AM IST

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்து உள்ளன. கூட்டணி கட்சி தலைவர்களிடம் இரு தரப்பினரும் தனித்தனியாக ஆதரவு கேட்டனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததால் அங்கு பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

எடப்பாடி பழனிசாமி அணி போட்டி

இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடுகிறது. வேட்பாளர் பெயர் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் பிரசாரத்தை தி.மு.க. தொடங்கிவிட்டது.

அ.தி.மு.க. கூட்டணியில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. களம் இறங்க விரும்பியது. அதற்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனும் பச்சைக்கொடி காட்டிவிட்டார்.

அ.தி.மு.க. வேட்பாளர் யார்? என்பதை இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிக்க உள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் அணியும் களம் இறங்கியது

இந்த சூழ்நிலையில் சென்னை அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 'ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் நாங்கள் போட்டியிடுவோம். இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டால் சுயேச்சையாக களம் இறங்குவோம்' என்று அதிரடியாக அறிவித்தார்.

ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி அணி போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில் தற்போது ஓ.பன்னீர்செல்வம் அணியும் களம் இறங்க உள்ளதாக கூறியிருப்பதால் இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது.

ஜி.கே.வாசனுடன் சந்திப்பு

இது ஒருபுறம் இருக்க கூட்டணி கட்சி தலைவர்களின் ஆதரவை பெறுவதற்கு இரு தரப்பிலும் போட்டா போட்டி நிலவுகிறது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி உள்ளிட்டோர் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து அவரது ஆதரவை பெற்றனர்.

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்துள்ள நிலையில் ஜி.கே.வாசனை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் நேற்று திடீரென சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், கு.ப. கிருஷ்ணன் மற்றும் பி.எச்.மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பை தொடர்ந்து வெளியே வந்த ஓ.பன்னீர்செல்வம், 'இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. இடைத்தேர்தலுக்கு ஆதரவு கேட்டோம்' என்று தெரிவித்தார்.

பா.ஜ.க. அலுவலகத்தில் சந்திப்பு

இந்த சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் சென்னை கமலாலயத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை நேற்று மதியம் சந்தித்து ஆதரவு கேட்டனர்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறும்போது, 'ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டு தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை சந்தித்து உள்ளோம். இது குறித்து பா.ஜ.க. தலைவர் தனது முடிவை அறிவிப்பார்' என்றார்.

பா.ஜ.க.வுக்கு ஆதரவு

அவர்கள் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் கமலாலயத்துக்கு வந்து அண்ணாமலையை சந்தித்து பேசினார்.

சந்திப்பு முடிந்து வெளியே வந்த ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறும்போது, 'தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். இந்த சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் குறித்து ஏற்கனவே விரிவாக பேட்டி அளித்துள்ளேன். பா.ஜ.க. போட்டியிட்டால் தேசிய நலன் கருதி தார்மீக ஆதரவு அளிப்போம்' என்று தெரிவித்தார்.

ஒரே நாளில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வந்ததால்கமலாலயம் நேற்று களைகட்டியது.

ஜான்பாண்டியனுடன் சந்திப்பு

முன்னதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான்பாண்டியனை சென்னை சூளைமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலையில் சந்தித்து ஆதரவு கோரினர். ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் நேற்று மாலை ஜான்பாண்டியனை சந்தித்து ஆதரவு கேட்டார்.

பின்னர் ஓ.பன்னீர்செல்வம் அங்கிருந்து புறப்பட்டபோது, 'சந்திப்பு மிகவும் திருப்திகரமாக இருந்தது. அண்ணன் (ஜான் பாண்டியன்) பாச உணர்வோடு எங்களோடு உரையாடினார். அடுத்தகட்டமாக யாரை சந்தித்தாலும் உங்களிடம் (நிருபர்கள்) சொல்லிவிட்டுதான் செல்வோம்' என்று பதில் அளித்தார்.

இரட்டை இலை சின்னம்

ஜான் பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 'அ.தி.மு.க. உள்கட்சி விவகாரத்துக்கு உள்ளே நான் செல்ல விரும்பவில்லை. அவர்கள் 2 பேரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கான முயற்சியில் நான் ஈடுபட இருக்கிறேன்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 'இரட்டை இலை' சின்னம் யாரிடம் இருக்கிறதோ, அவர்களுக்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆதரவு அளிக்கும்' என்று தனது நிலைப்பாட்டை அறிவித்தார்.

புரட்சி பாரதம் ஆதரவு யாருக்கு?

இந்த சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி அணியினர், மற்றொரு கூட்டணி கட்சியான புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் பூவை ஜெகன்மூர்த்தியை தாம்பரம் அருகே உள்ள தனியார் விடுதியில் சந்தித்து ஆதரவு கேட்டனர். அப்போது முன்னாள் அமைச்சர் சின்னையா, மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் ஜெகன்மூர்த்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 'ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் என்னிடம் பேச்சுவார்த்தை நடத்த வருவதாக தெரிவித்து உள்ளனர். நான் எம்.எல்.ஏ.வாக எடப்பாடி பழனிசாமி அணியுடன் நல்ல தொடர்பில் உள்ளேன்.

எனவே இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு புரட்சி பாரதம் கட்சி ஆதரவு அளிக்கிறது' என்று தெரிவித்தார்.

அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களை தேடி சென்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சந்தித்து வருவது அரசியல் வட்டாரத்தையும், தேர்தல் களத்தையும் பரபரப்பு அடைய செய்துள்ளது.

எதிர்பார்ப்பு

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த பா.ம.க. போட்டியும் இல்லை. எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்று அக்கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அதிரடியாக அறிவித்துவிட்டார்.

தமிழக பா.ஜ.க.வின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கா? ஓ.பன்னீர்செல்வத்துக்கா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அண்ணாமலையின் அறிவிப்பை இரு தரப்பினரும் ஆவலோடு எதிர்நோக்கி உள்ளனர்.

ஜான்பாண்டியனும் சந்திப்பு

இதே போன்று தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியனும் தனது கட்சி நிர்வாகிகளுடன் அண்ணாமலையை சந்தித்தார். இந்த சந்திப்புகளின் போது, பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, மாநில துணைத்தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்