பொதுக்குழு நடத்திய கையோடு அடுத்த மூவ்!.. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அறிவித்த இபிஎஸ்
|அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியிருப்பதால் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. தேர்தல் பணிகளை இப்போதே கட்சிகள் ஆரம்பித்து விட்டன. நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைக்க போவதாக அறிவித்துள்ள அதிமுக கட்சி பணிகளில் வேகம் காட்டி வருகிறது.
கடந்த 26 ஆம் தேதி அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மகாலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற களப்பணியாற்ற வேண்டும் உள்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. உயிரோட்டம் உள்ள கட்சி. எந்த கொம்பனாலும் அ.தி.மு.க.வை அழிக்கவோ முடக்கவோ முடியவில்லை. அ.தி.மு.க. மக்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட கட்சி" என்று பேசினார்.
இந்த நிலையில், பொதுக்குழு கூட்டம் முடிந்த அடுத்த சில நாட்களில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கும் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அக்கட்சி தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் வரும் 9ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகள் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.