< Back
மாநில செய்திகள்
அதிமுக பொதுக்குழு விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கேவியட் மனு தாக்கல்
மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழு விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கேவியட் மனு தாக்கல்

தினத்தந்தி
|
7 Sept 2022 2:36 PM IST

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.

புதுடெல்லி,

ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் கடந்த ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி தீர்ப்பு அளித்தார். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்குகளை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து கடந்த 2-ந் தேதி பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், 'அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடராத நிலையில், அதற்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க முடியாது. இருவரும் இணைந்துதான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என்ற உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. தனி நீதிபதி தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது' என்று தெரிவித்தனர்.

இந்த தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. சார்பில் வக்கீல் பாலாஜி சீனிவாசன் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.

அதில் 'இந்த விவகாரத்தில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யும்போது, தங்களது தரப்பு கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு தொடர்பாக அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளனர். ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. சார்பில் வக்கீல் பாலாஜி சீனிவாசன் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனுக்களை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

மேலும் செய்திகள்