ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறாது: வைத்திலிங்கம் பேட்டி
|ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறாது என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேட்டியளித்துள்ளார்.
தஞ்சாவூர்,
அ.தி.மு.க.வை வழிநடத்த ஒற்றை தலைமையா? இரட்டை தலைமையா? என்ற விவாதம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இது தொடர்பாக கடந்த 23-ந் தேதி பொதுக்குழு கூட்டம் களேபரமாக நடந்து முடிந்தது. தற்போது இரு அணிகளாக கட்சி செயல்பட்டு வருகிறது.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளரான துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் நேற்று முன்தினம் தனது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தெலுங்கன்குடிகாடு கிராமத்துக்கு வந்தார். இன்று அவர் தஞ்சையில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டார். விழா முடிந்து தஞ்சையில் உள்ள ஒரு ஓட்டலில் ஓய்வெடுக்க சென்றார். அப்போது நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
நடந்து முடிந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு செல்வாக்கு தமிழகம் முழுவதும் பன்மடங்கு அதிகரித்து உள்ளது. கட்சியில் உறுப்பினர்களாக இல்லாத 600 பேரை பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள செய்தனர். அதனால்தான் கடும் கூச்சல் குழப்பத்துடன் கூட்டம் நடைபெற்றது.
அடுத்த மாதம் 11-ந் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். அந்த பொதுக்குழு கூட்டம் நடைபெறாது. எங்கள் அணியில் இருந்து திரும்பி சென்ற பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் மீண்டும் திரும்பி வந்து கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.