அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீடு சூறை; காருக்கு தீ வைப்பு - மதுரையில் பரபரப்பு
|மதுரையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டை மர்ம நபர்கள் சூறையாடினர். மேலும் அவரது காருக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
மதுரை,
மதுரை கருவனூரை சேர்ந்தவர் பொன்னம்பலம். இவர் சமயநல்லூர் தொகுதியில் 2001-2006ம் ஆண்டில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தார். கருவனூரில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அங்குள்ள கருமாரியம்மன் கோவிலில் மரியாதை தருவது தொடர்பாக பொன்னம்பலத்துக்கும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு குடும்பத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஒருவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. அது தொடர்பாக இருவரது குடும்பத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரது வீட்டுக்குள் சில மர்ம நபர்கள் கும்பலாக புகுந்தனர். அவர்கள் பொன்னம்பலம் வீட்டில் நிறுத்தப்பட்டி ருந்த கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை அடித்து உடைத்தனர். ஒரு காரை தீ வைத்து எரித்தனர். மேலும் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களையும் அடித்து நொறுக்கினர். அதனை வீட்டில் இருந்த பொன்னம் பலத்தின் குடும்பத்தினர் தடுத்தனர். அவர்களை தாக்கி விட்டு பொன்னம் பலத்தின் வீட்டை அந்த நபர்கள் சூறையாடிவிட்டு தப்பி சென்றுவிட்டனர். மர்ம நபர்களின் இந்த தாக்குதலில் பொன்னம்பலத்தின் வீடு போர்க்களம்போல் காட்சி அளித்தது.
இந்த தகவல் அறிந்த அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மர்ம நபர்கள் தாக்கியதில் பொன்னம்பலத்தின் குடும்பத்தினர் 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்தில் பொன்னம் பலம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காருக்கு தீ வைத்த புகாரில் திமுக கிளை செயலாளர் வேல்முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவிலில் மரியாதை கொடுக்கும் விவகாரத்தில் எதிர்தரப்பினர் தாக்குதலில் ஈடுபட்டது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சிலரை தேடி வருகின்றனர்.