< Back
மாநில செய்திகள்
அதிமுக தேர்தல் குழுக்கள் நாளை முதற்கட்ட ஆலோசனை
மாநில செய்திகள்

அதிமுக தேர்தல் குழுக்கள் நாளை முதற்கட்ட ஆலோசனை

தினத்தந்தி
|
24 Jan 2024 12:15 PM IST

அதிமுகவின் நாளைய ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சென்னை

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. தேர்தலை எதிர்கொள்வதற்காக அரசியல் கட்சிகள் தங்களை முழுவீச்சில் தயார்படுத்தும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன.

இதற்கிடையில் தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை, தேர்தல் பணிகள் போன்றவற்றுக்காக 4 குழுக்களை அதிமுக அமைத்து உள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்காணிப்பில் செயல்பட உள்ள இந்த 4 குழுக்களும் நாளை (வியாழக்கிழமை) சென்னையில் முதற்கட்ட ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

4 குழுக்களில் இடம்பெற்று இருப்பவர்களும் அடுத்த கட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர். குறிப்பாக வேட்பாளர் தேர்வு பற்றி விரிவாக ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது. தொகுதி பங்கீடுக்காக கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பென்ஜமின் ஆகிய 5 பேர் கொண்ட குழுவை எடப்பாடி பழனிசாமி உருவாக்கி இருக்கிறார். நாளை இந்த குழு முக்கிய முடிவுகளை மேற்கொள்ளும் என்று தெரிகிறது.

அதுபோல நத்தம் விஸ்வநாதன் தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவும் நாளை ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட பணிகள் குறித்து முடிவு செய்ய உள்ளது. அ.தி.மு.க.வில் தம்பி துரை தலைமையில் தேர்தல் பிரசார குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதிமுகவின் நாளைய ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும் செய்திகள்