உருவாகிறது அதிமுக ஒருங்கிணைப்பு குழு; ஓபிஎஸ் அணியில் இருந்து ஜேசிடி பிரபாகரன், புகழேந்தி விலகல்
|பன்னீர் செல்வம் வேறு ஒரு திசையில் செல்கிறார். அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. என்று புகழேந்தி கூறினார்.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 இடங்களிலும் தோல்வி அடைந்தது. இதனால், எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த புகழேந்தி, ஜேசிடி பிரபாகரன் ஆகியோர் ஓ பன்னீர் செல்வம் அணியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.
ஓ. பன்னீர் செல்வத்தின் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவில் இருந்து விலகி கேசி பழனிசாமியுடன் இணைந்து அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை தொடங்கியுள்ளனர். இதுதொடர்பாக கேசிடி பிரபாகரன் கூறுகையில், தேர்தல் முடிந்த பிறகு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்தை கூறினேன். அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற பணிகளை தொடங்கி உள்ளோம்." என்றார்.
புகழேந்தி கூறுகையில், " ஓ. பன்னீர் செல்வம் வேறு ஒரு திசையில் செல்கிறார். அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.ஓ. பன்னீர் செல்வத்திற்கும் எங்களுக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை. எல்லோரும் ஒருங்கிணைந்து செல்ல வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். வடக்கில் இருந்து வந்து ஆள்வதற்கு நாங்கள் விட மாட்டோம். தேசிய கட்சிகள் 2-வது இடத்திற்கு வரக் கூடாது.
மக்களவை தேர்தலில் அதிமுக 7 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது வருத்தமாக உள்ளது" என்றார். முன்னாள் எம்.பி கே.சி. பழனிசாமி கூறுகையில், " அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே நிர்வாகிகள், மக்களின் எண்ணமாக உள்ளது. தேசிய கட்சிகளுக்கு அடிபணிந்தோ, சார்ந்தோ, அதிமுகவில் யாரும் செயல்படக் கூடாது. அதிமுகவில் சிலரை சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று கூறாமல் அனைவரையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.