அதிமுக - பாஜக கூட்டணி உடைந்த கண்ணாடியைப் போன்றது: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி
|அதிமுக-பாஜக கூட்டணி உடைந்த கண்ணாடியைப் போன்றது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விமர்சித்துள்ளார்.
மதுரை,
தமாகா, அதிமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியில் இணையும் விழா மதுரையில் நடைபெற்றது. கே.எஸ். அழகிரி, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் முன்னிலையில், 300 க்கும் மேற்பட்டவர்கள் காங்கிரசில் இணைந்தனர்.
முன்னதாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதுரை வந்த கே.எஸ். அழகிரி, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
அகில இந்திய முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று ஜனநாயகம் வேண்டும் என்று பேசினார். ஏனென்றால் இந்தியாவின் பராம்பரியம் ஜனநாயகம். ஆனால் ராகுல் காந்தி தவறாகப் பேசுகிறார் என பாஜக குற்றம் சாட்டுகிறது.
ராகுல் காந்தி பேசியதுதான் உண்மை. ஒவ்வொருக்கும் பேசுவதற்கு உரிமை உண்டு. ஜனநாயகத்தை பாதுகாப்பது நமது கடமை. அழிப்பது கடமையல்ல. காங்கிரஸ் ஆட்சியில் நாடாளுமன்றத்தில் எதை வேண்டுமானாலும் பேச முடிந்தது. அதற்கு அனுமதி இருந்தது. இன்றைக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. தனது கருத்தை நாடாளுமன்றத்தில் சொல்கிறேன் என ராகுல் கூறுகிறார்.
ஆனால், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. ராகுல் காந்தி அரசியல் பேசுவதைத் தவிர்த்து வேறு எதை பேசுவது? அதானியை பற்றி அவர் பேசுவது தவறா? அதானி குறித்து பேசினால் தேச துரோகமா? இந்தியாவில் தனி மனிதர் வியாபாரம் செய்வதை நாம் எதிர்ப்பதில்லை. அதற்கான உரிமை உண்டு. சட்டமும் அனுமதிக்கிறது.
இந்தியாவிலுள்ள பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் முதலாளிக்கு உதவி செய்கின்றன. ஏன் இது நடக்கிறது என கேள்வி கேட்கக் கூடாதா? அதானியை குற்றம் சாட்டினால் இந்தியாவை குற்றம் சாட்டுவதாக சித்தரிப்பது தவறு. தமிழகத்தில் திமுக தலைமையில் மதசார்பற்ற கூட்டணி உள்ளது. அதிமுக-பாஜக கூட்டணி உடைந்த கண்ணாடி போன்றது. அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகிறார்.
அவர்களது கூட்டணி தனி நபர்களை மையமாகக் கொண்டது. எங்கள் கூட்டணி கொள்கை அடிப்படையிலானது. தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்களின் தேவை இருப்பதால் வரவழைக்கப்படுகின்றனர். பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்கோ, கட்சியின் கொள்கைக்கோ ஆட்கள் வருவதில்லை. பணம் கொடுத்துத்தான் ஆட்களை அழைத்து வருகின்றனர்.
அரசியலில் பணம் இருந்தால் வெற்றி பெறலாம் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அப்படியெனில் மாநில முதல்வர்களாகவும், பிரதமராகவும் அதானி, அம்பானி போன்றவர்கள் தான் வர முடியும். மன்மோகன் சிங் போன்றவர்கள் எப்படி பிரதமராக முடியும்? பணம் மட்டும் அரசியல் அல்ல. அரசியலுக்கு பணமும் ஒரு தேவையாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.