கரூர்
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு கரூர் மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு
|தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு கரூர் மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
பூ மார்க்கெட்
கரூர் ரெயில்வே ஜங்ஷன் அருகே மாரியம்மன் பூ மார்க்கெட் வணிக வளாகம் உள்ளது. பூக்களை விவசாயிகள் நேரடியாக இந்த மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து ஏலம் மூலம் விற்று செல்கின்றனர். இந்த பூ மார்க்கெட்டிற்கு மாயனூர், மலைப்பட்டி, கருப்பூர், லந்தக்கோட்டை, செக்கணம் உள்ளிட்ட இடங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த பூக்களை பறித்து கொண்டு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
பெரும்பாலும் மல்லிகை, முல்லை, அரளி, ஜாதிப்பூ உள்ளிட்ட பூக்களை இங்கிருந்து வியாபாரிகள், பூக்கட்டும் பெண்கள் உள்ளிட்டோர் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
விலை உயர்வு
ஒரு கிலோ எடை கொண்ட மல்லிகை பூ ரூ.800 முதல் ரூ.900-க்கும், முல்லை பூ ரூ.500-க்கும், அரளி பூ ரூ.300-க்கும், ஜாதி பூ ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும், ரோஜா பூ ரூ.100 முதல் ரூ.120-க்கும், மருவு 4 கட்டு ரூ.100-க்கும், துளசி 4 கட்டு ரூ.70-க்கும், மாசி பச்சை 4 கட்டு ரூ.80-க்கும் விற்பனையானது. இதுகுறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று பூக்களின் விலை அதிகரித்து உள்ளது. கடந்த வாரங்களில் மல்லிகை பூ ரூ.400-க்கும், முல்லை பூ ரூ.300-க்கும், அரளி பூ ரூ.150-க்கும், கனகாம்பரம் ரூ.200-க்கும், துளசி 4 கட்டு ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
வாழைத்தார் விற்பனை மந்தம்
கரூர் ரெயில் நிலையம் அருகே வாழை மண்டி செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட லாலாபேட்டை, மாயனூர், கிருஷ்ணராயபுரம், வாங்கல், நாமக்கல் மாவட்டம் மோகனூர், காட்டுப்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பூவன், ரஸ்தாளி, கற்பூரவள்ளி உள்ளிட்ட வாழைத்தார்கள் மற்றும் ஈரோடு மாவட்டம் கோபி மற்றும் வேலூர், தேனி, போடி ஆகிய பகுதிகளில் இருந்து செவ்வாழை பழங்கள், மோரிஸ் பழவகைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்படுகிறது. இதனை கரூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வரும் வியாபாரிகள் ஏலம் எடுத்து வாங்கி செல்கின்றனர்.
இதேபோல தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று வியாபாரிகள் தங்களுக்கு தேவையான வாழைத்தார்களை ஏலம் மூலம் வாங்கி சென்றனர். இதில் பூவன் 200-க்கும், பச்சநாடான் ரூ.200-க்கும், கற்பூரவள்ளி ரூ.200-க்கும், ரஸ்தாளி ரூ.200-க்கும், செவ்வாழை ஒரு பழம் ரூ.7-க்கும் விற்பனையானது. கரூர் வாழை மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை மந்தமாகவே இருந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வாழைத்தார்களின் விலை ரூ.400-க்கு விற்பனையானது. ஆனால் தற்போது வரத்து அதிகரிப்பால் வாழைத்தார்களின் விலை பாதியாக குறைந்துள்ளதாகவும், விற்பனையும் மந்தமாக இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.