< Back
மாநில செய்திகள்
பிரதமர் வருகையை முன்னிட்டு 10 கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
மாநில செய்திகள்

பிரதமர் வருகையை முன்னிட்டு 10 கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

தினத்தந்தி
|
3 March 2024 4:37 PM IST

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கல்பாக்கத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை,

பிரதமர் நரேந்திர மோடி நாளை (திங்கட்கிழமை) மதியம் 1.15 மணிக்கு மராட்டியத்தில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு, சென்னைக்கு மதியம் 2.45 மணிக்கு வருகிறார். பின்னர் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, கல்பாக்கம் ஹெலிகாப்டர் தளத்திற்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்று மதியம் 3.30 முதல் மாலை 4.15 மணி வரை கல்பாக்கம் அணு உலை ரியாக்டர் மேம்பாடு (உற்பத்தி) திட்டத்தை பார்வையிடுகிறார்.

அதனைத்தொடர்ந்து மீண்டும் கல்பாக்கம் ஹெலிபேடு சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக மாலை 5 மணிக்கு மீண்டும் சென்னை விமான நிலைய ஹெலிகாப்டர் தளத்துக்கு வருகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக நந்தனம் பொதுக்கூட்ட திடலுக்கு மாலை 5.10 மணிக்கு வருகிறார். மாலை 6.15 மணி வரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, மாலை 6.20 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக விமான நிலையம் செல்கிறார். மாலை 6.35 மணிக்கு சென்னையில் இருந்து தெலுங்கானா நோக்கி விமானத்தில் அவர் புறப்பட்டு செல்கிறார்.

இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு நாளை பிரதமர் மோடி வருகை தரவுள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம், கொக்கிலிமேடு, மெய்யூர், சட்ராஸ், புதுபட்டினம், உய்யாளி குப்பம் போன்ற பத்து கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று முதல் நாளை மாலை 6 மணி வரை மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

மேலும் பிரதமர் வருகையை முன்னிட்டு கல்பாக்கத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் என 10 மாவட்டங்களைச் சேர்ந்த 2,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

10 வெடிகுண்டு சோதனைக் குழு, 8 மோப்ப நாய்கள் மற்றும் கடலோரப் படை மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கல்பாக்கத்திற்கு வருகை தரும் அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்