விருதுநகர்
காரியாபட்டியில் வேளாண்துறை திட்டங்கள்
|காரியாபட்டியில் வேளாண்மை துறை திட்டங்களின் பணிகள் குறித்து ஸ்டாமின் இயக்குனர் சங்கரலிங்கம் ஆய்வு செய்தார்.
காரியாபட்டி,
காரியாபட்டியில் வேளாண்மை துறை திட்டங்களின் பணிகள் குறித்து ஸ்டாமின் இயக்குனர் சங்கரலிங்கம் ஆய்வு செய்தார்.
தொழில்நுட்பங்கள்
காரியாபட்டி அருகே பாஞ்சர், பாம்பாட்டி பகுதிகளில் காரிப்பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட உளுந்து, பாசிபயறு சாகுபடி பரப்பை வேளாண்மைத்துறை ஸ்டாமின் இயக்குனர் சங்கரலிங்கம் ஆய்வு செய்தார். மேலும் உளுந்து விதைப்பண்ணை விவசாயிகளுடன் தொழில்நுட்பங்கள் குறித்து கலந்துரையாடினார்.
கம்பிக்குடியில் தமிழ்நாடு பசுமை போர்வை இயக்கத்தின் கீழ் நடவு செய்யப்பட்ட தேக்கு மரக்கன்றுகளை ஆய்வு செய்தார். கலைஞரின்அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2022-23-ன் கீழ் அமைக்கப்பட்ட வி.நாங்கூர் தரிசு நில தொகுப்பை பார்வையிட்டார்.
50 சதவீத மானியம்
எஸ்.கல்லுப்பட்டி கிராமத்தில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் 100 சதவீத மானியத்தில் விவசாயி முத்தையா அவர்களுக்கு வழங்கப்பட்ட தெளிப்பு நீர் பாசன அமைப்பை பார்வையிட்டு அதன் பயன்பாடு குறித்து விவசாயியுடன் கலந்துரையாடினார்.
தொடர்ந்து விவசாயிகளுக்கு மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பண்ணை கருவிகள் 50 சதவீத மானியத்தில் வழங்கினார். ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குனர் பத்மாவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) நாச்சியார்அம்மாள், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் செல்வராணி மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.