< Back
மாநில செய்திகள்
விவசாய கடனை விரைவில் வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன்
மாநில செய்திகள்

விவசாய கடனை விரைவில் வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன்

தினத்தந்தி
|
2 Oct 2024 10:26 AM IST

விவசாயிகள் பயிர் செய்யும் பரப்பளவிற்கு தாமதமின்றி கடன் வழங்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்

சென்னை,

த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழக அரசு, விவசாயிகளுக்கு விவசாயக் கடனை முறையாக காலத்தே வழங்கி விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் துணை நிற்க வேண்டும். தமிழக அரசு மாநிலம் முழுவதும் விவசாயத்தொழிலை மேம்படுத்த விவசாயிகளுக்கு விவசாயக் கடனை வழங்க தொடர் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.தமிழக அரசு நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி விவசாயிகளுக்கு கடன் வழங்க மறுப்பதாக விவசாயிகள் குறை கூறுகின்றனர்.விவசாயிகளுக்கு பயிர்க்கடன், நகைக்கடன், ஆடு மாடு வாங்குவதற்கான கடன் வழங்கப்படும். தள்ளுபடி செய்யப்படும் கடன்களுக்கு அரசு நிதிஉதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு நிதிப்பற்றாக்குறை ஏற்படுகிறது.விவசாயிகளுக்கு கடன் வழங்குவதில் எவ்வித சமரசமும், காரணமும் இருக்கக்கூடாது.

விவசாயத்திற்கு தான் முதலில் நிதி ஒதுக்க வேண்டுமே தவிர நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி விவசாயத் தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது. எனவே தமிழக அரசு விவசாயக் கடனுக்காக காத்திருக்கும் விவசாயிகள் பயிர் செய்யும் பரப்பளவிற்கு தாமதமின்றி காலத்தே கடன் வழங்க உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்