தஞ்சாவூர்
விவசாய பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்
|விவசாய பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்
விவசாய பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தஞ்சை மாவட்ட புதிய கலெக்டர் தீபக் ஜேக்கப் கூறினார்.
புதிய கலெக்டர் பொறுப்பேற்பு
தஞ்சை மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சென்னை பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி.யாக பணியிட மாறுதல் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டராக பணி புரிந்து வந்த தீபக் ஜேக்கப் தஞ்சை மாவட்ட புதிய கலெக்டராக நியமனம் செய்யப்பட்டார்.
நேற்றுகாலை தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சை மாவட்டத்தின் புதிய கலெக்டராக தீபக் ஜேக்கப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் முன்னாள் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பொறுப்புகளை ஒப்படைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
வாழ்த்து
தஞ்சை மாவட்டத்தின் 171-வது கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்ட தீபக் ஜேக்கப்பை கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், விவசாயிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் புதிய கலெக்டர் தீபக் ஜேக்கப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தஞ்சை மாவட்ட கலெக்டராக பணி புரிய வாய்ப்பு அளித்த தமிழகஅரசுக்கும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பொதுமக்கள் கோரிக்கைகள் அனைத்தும், உயர் அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்து விரைவில் தீர்க்கப்படும். மாவட்டத்தில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் எனது கவனத்திற்கு நேரடியாக கொண்டு வந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாய பிரச்சினை
அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி, மாவட்டத்தில் என்னென்ன பிரச்சினைகள் இருக்கிறது என்பதை அறிந்து அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். தஞ்சையில் மதுகுடித்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை அறிக்கையை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த 2014-15-ம் ஆண்டில் தஞ்சையில் உதவி கலெக்டராக பயிற்சியில் இருந்தேன். இதனால் இங்கு திரும்பி வந்ததை, எனது தாய் வீட்டுக்கு வந்தது போல் உணர்கிறேன். தஞ்சை மாவட்டம் காவிரி டெல்டா மாவட்டம் என்பதால், விவசாய பிரச்சினை, விவசாயிகள் கோரிக்கை, பாசன வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அனைத்து பிரச்சினைகளும் ஆய்வு செய்து அவை தீர்க்கப்படும்.
காலிப்பணியிடங்கள்
தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு ஏற்கனவே 2 முறை வந்து ஆய்வு செய்து இருக்கிறேன். அதனால் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியை பற்றி நன்கு தெரியும். மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியின் தேவைகள், குறைகள், காலிப்பணியிடங்கள் நிரப்புதல் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். வருவாய்த்துறை அலுவலர்களுடன் ஆலோசனை செய்து மணல் கடத்தலை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பயோடேட்டா
புதிய கலெக்டர் தீபக் ஜேக்கப் சொந்த ஊர் கேரள மாநிலம் கொல்லம் ஆகும். பி.டெக் படித்துள்ளார். 2014-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் தஞ்சை மாவட்ட உதவி கலெக்டராகவும், தூத்துக்குடி மாவட்ட உதவி கலெக்டராக பணியாற்றினார். பின்னர் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனராக பணியாற்றினார்.
இதன் பின்னர் தேர்தல் ஆணையத்தில் இணை முதன்மை அலுவலராகவும், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குனராகவும், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் மேலாண்மை இயக்குனராகவும் இவர் பணியாற்றினார். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டராக பொறுப்பு வகித்த இவர், தற்போது தஞ்சை மாவட்டத்தின் 171-வது கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார்.