கள்ளக்குறிச்சி
வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்க வேண்டும்
|கல்வராயன்மலை ஒன்றியத்தில் வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்க வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோாிக்கை வைத்தனர்
கள்ளக்குறிச்சி
குறைதீர்க்கும் கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி, கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குனர் முருகேசன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மீனா அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குடோன் அமைக்க வேண்டும்
கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் கரும்பு வெட்டும் கூலியை அரசு கட்டுப்படுத்த வேண்டும், தற்போது கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரியை கட்டுப்படுத்த தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். கல்வராயன் மலை ஒன்றியத்தில் வேளாண்மை விரிவாக்கம் மையம் அமைக்க வேண்டும். கடைகளில் வினியோகம் செய்யப்படும் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் தரமானதாக இல்லை, இதை அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.
மக்காச்சோளம் விதைக்கும் கருவியை மானிய விலையில் வழங்க வேண்டும். ஒவ்வொரு ஒன்றியத்திலும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களை பாதுகாப்பாக வைக்க குடோன் அமைக்க வேண்டும். சாத்தனூர் அணை பாசன கால்வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அரசுக்கு பரிந்துரை
இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் பதில் அளித்து பேசும்போது, இந்த மாதம் முதல் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை அதிக எண்ணிக்கையில் திறக்கவும், அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் உலர் களம் அமைக்கவும், தார்பாய் வழங்கிடவும் அதிகாரிகளை அறிவுறுத்தினார். மக்காச்சோளம் விதைக்கும் கருவியை மானிய விலையில் வழங்கிட தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.
பருவமழை காலங்களில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடவும் மற்றும் அம்மை நோய்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு மருந்துகளை தயார் நிலையில் வைத்துக்கொள்ள கால்நடைத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். சாத்தனூர் அணையின் கிளை வாய்க்கால்களை தூர்வாரி விவசாயத்துக்கு தேவையான தண்ணீரை கடைமடை பகுதிவரை தடையின்றி கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் மின்சார வாரிய மேற்பார்வை மின்பொறியாளர் அருட்பெருஞ்ஜோதி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.