< Back
மாநில செய்திகள்
வேளாண் பட்ஜெட்டில் அங்கக வேளாண்மை கொள்கைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்
மாநில செய்திகள்

வேளாண் பட்ஜெட்டில் அங்கக வேளாண்மை கொள்கைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

தினத்தந்தி
|
19 March 2023 7:34 PM IST

வேளாண் பட்ஜெட்டில் அங்கக வேளாண்மை கொள்கைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் 14-3-2023 அன்று தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை-2023 வெளியிடப்பட்டது.

தமிழ்நாட்டில், இதற்கு முன்பாக அங்கக வேளாண்மைக்கு என்று எந்தவொரு கொள்கையும் இல்லாத நிலையில், அதன் தேவையை அறிந்து, மக்களின் உடல் நலத்தை பேணிக்காக்கவும், மண்வளம், இயற்கை வளத்தை காப்பதற்கும், நீடித்த நிலையான வேளாண்மையினை நமது மாநிலத்தில் உறுதிப்படுத்தும் நோக்கத்திலும் இந்த அங்கக வேளாண்மைக் கொள்கை வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கையினை வெளியிட்ட பிறகு, விவசாயிகளிடம் இருந்தும், அங்கக வேளாண் ஆர்வலர்களிடம் இருந்தும் அரசின் கொள்கையினை பாராட்டியும், மாறுபட்ட கருத்துக்களையும் தெரிவித்து, விமர்சனங்களும், திறனாய்வுகளும் வரத் தொடங்கியுள்ளன.

அங்கக வேளாண்மைக் கொள்கையில் அதன் தேவை, நோக்கங்கள், நன்மைகள், அதற்கான உத்திகள், தகவல் பரிமாற்றம், சந்தைப்படுத்துதல், விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பான கருத்துக்கள் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

இந்த அங்கக வேளாண்மைக் கொள்கையினை, கிராமப்புற விவசாயிகள் முதல் படித்தவர்கள் வரை அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கான அங்கக வேளாண்மை கொள்கையினை வெளியிட்டதோடு நின்றுவிடாமல், இக்கொள்கையில் கூறப்பட்ட அம்சங்களை படிப்படியாக நிறைவேற்றும் வகையில், எதிர்வரும் வேளாண் பட்ஜெட்டில் அங்கக வேளாண்மை கொள்கைக்கு அதிக முக்கியத்துவம் தந்து, பல்வேறு திட்டக்கூறுகளை உள்ளடக்கி, அதற்கான திட்டங்களையும் வகுத்து கொடுத்துள்ளார்.

எந்த ஒரு கொள்கையும் நிலையானதல்ல. மாற்றத்திற்குட்பட்டதே. எனவே, இக்கொள்கை தொடர்பாக எழுந்துள்ள திறனாய்வு மற்றும் விமர்சனக் கருத்துக்களை ஆராய்ந்து தேவையானவற்றை எடுத்துக் கொண்டு, புதிய பொருண்மைகளை சேர்த்துக்கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்