விருதுநகர்
விவசாய பணிகள் தீவிரம்
|நரிக்குடி பகுதிகளில் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
காரியாபட்டி,
நரிக்குடி பகுதிகளில் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
நாற்று நடும் பணி
திருச்சுழி தொகுதியில் காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பொதுமக்கள் பெரும்பாலானோர் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால் இந்த ஆண்டு இதுவரை சரியாக மழை இல்லாததால் போர்வெல் மூலம் தண்ணீர் எடுத்து நெல் நாற்று நடும் பணியை தொடங்கினர்.
பல்வேறு இடங்களில் கண்மாய்களில் தண்ணீர் இல்லாததால் நாற்றுகூட போட முடியாமல் விவசாயிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். போர்வெல் வைத்திருக்கும் விவசாயிகள் மட்டுமே நாற்று போட்டு நெல் நடவு பணி செய்து வருகின்றனர். மீதமுள்ள விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
விவசாயிகள் அச்சம்
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
திருச்சுழி தொகுதியில் பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தை நம்பி தான் வாழ்ந்து வருகின்றனர். தற்போது இந்த பகுதியில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் இல்லாததால் விவசாயம் செய்யும் பரப்பளவும், விவசாயிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
இந்தநிலையில் நரிக்குடி அருகே உள்ள எஸ்.கல்விமடை கிராமத்தில் போர்வெல் தண்ணீரை பயன்படுத்தி தற்போது நெல் நாற்று நடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இருப்பினும் அறுவடை வரை போதுமான தண்ணீர் கிடைக்குமா என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.