< Back
மாநில செய்திகள்
15,686 விவசாயிகளுக்கு, ரூ.34 லட்சத்தில் வேளாண் இடுபொருட்கள்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

15,686 விவசாயிகளுக்கு, ரூ.34 லட்சத்தில் வேளாண் இடுபொருட்கள்

தினத்தந்தி
|
23 May 2022 4:48 PM GMT

மயிலாடுதுறை மாவட்டத்தில், 15,686 விவசாயிகளுக்கு ரூ.34 லட்சத்தில் விவசாய உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை மாவட்டத்தில், 15,686 விவசாயிகளுக்கு ரூ.34 லட்சத்தில் விவசாய உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. இதனை விவசாயிகளுக்கு, கலெக்டர்-எம்.எல்.ஏ.க்கள் வழங்கி தொடங்கி வைத்தனர்.

வேளாண் வளர்ச்சி திட்டம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து நேற்று காணொளி வாயிலாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்கீழ் மயிலாடுதுறை மாவட்டத்தில் 15,686 விவசாயிகளுக்கு ரூ.34 லட்சம் மதிப்பில் வேளாண் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது.அந்தவகையில், மயிலாடுதுறை மாவட்டம் கங்கணாம்புத்தூர் ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் லலிதா, எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், ராஜகுமார், பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள், கைத்தெளிப்பான், தோட்டக்கலை உபகரணம், மின் தெளிப்பான் போன்ற வேளாண் இடுபொருட்களை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

37 ஊராட்சிகள்

இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது:-

இந்த திட்டத்தின் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் 37 கிராம ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 15 ஆயிரத்து 586 விவசாயிகளுக்கு வேளாண்மை துறையின் சார்பில் 7,400 விவசாயிகளுக்கு ரூ.11 லட்சத்தில் தென்னங்கன்றுகளும், 555 விவசாயிகளுக்கு ரூ.2 லட்சத்தில் வரப்பு உளுந்து சாகுபடிக்கு விதை வினியோகம், 185 விவசாயிகளுக்கு ரூ.1.3 லட்சத்தில் கைத்தெளிப்பானும், 247 விவசாயிகளுக்கு ரூ.5.5 லட்சத்தில் மின்களத் தெளிப்பானும் என மொத்தம் 8 ஆயிரத்து 387 விவசாயிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் பல்வேறு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.

தோட்டக்கலைத்துறை சார்பில் 4,625 விவசாயிகளுக்கு வீட்டுத்தோட்டம் அமைக்கவும், 74 விவசாயிகளுக்கு பாரம்பரிய காய்கறிகள் மற்றும் சாகுபடி ஊக்கத்தொகையும், 650 விவசாயிகளுக்கு தோட்டக்கலை உபகரணங்களும், 1,850 விவசாயிகளுக்கு வரப்பு ஓரங்களில் நடவு செய்ய மரக்கன்றுகள் என மொத்தம் 7,199 விவசாயிகளுக்கு ரூ.14.13 லட்சம் மதிப்பில் தோட்டக்கலை பயிர்களும் வழங்கப்படுகின்றன.

100 சதவீதம் மானியம்

மேலும், வேளாண்மைத்துறையின் சார்பில் உழவர் உற்பத்தியாளர் குழுவைச் சேர்ந்த 100 விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்துடன் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பவர் டில்லர்கள் வழங்கப்படுகிறது. ஆக மொத்தம் 15,686 பயனாளிகளுக்கு விவசாய இடுபொருள் சார்ந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தநிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஒன்றியக்குழு தலைவர் காமாட்சிமூர்த்தி, நகர்மன்ற தலைவர் செல்வராஜ், ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குனர் முருகண்ணன், வேளாண்மை இணை இயக்குனர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்