கள்ளக்குறிச்சி
வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
|கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கலெக்டர் ஷ்ரவன்குமார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்
கள்ளக்குறிச்சி
ஆய்வு கூட்டம்
வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைதுறை, வேளாண் வணிகதுறை மற்றும் வேளாண்மை பொறியியல் துறை உள்ளிட்ட வேளாண்துறை சார்ந்த அனைத்து நிலை அலுவலர்களுக்கான திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர்(பொறுப்பு) சுந்தரம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அன்பழகன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வேளாண்மைதுறையுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை உள்பட 16 துறைகளின் மூலம் 171 கிராமங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-
இல்லம்தேடி விதை விற்பனை
திட்ட பணிகளில் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். 2021-2022-ம் ஆண்டு தரிசு நிலத் தொகுப்பில் தேர்வு செய்யப்பட்ட பயனாளி இடத்தில் 100 சதவீதம் மானியத்தில் திறந்த வெளி கிணறு ஊரக வளர்ச்சிதுறை மூலம் அமைக்கப்படும் பணியை விரைந்து முடித்து நீர் பாசனம் மூலம் தொகுப்பில் உள்ள விவசாயிகளும் பயன் பெறும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
நெல்லுக்கு பின் உளுந்து விதைப்பதற்கு விவசாயிகளின் இல்லம் தேடி விதை விற்பனை செய்யவேண்டும். தோட்டக்கலைதுறை மூலம் வழங்கப்படும் பல்வகை பழச்செடிகள், காய்கறி தொகுப்புகள் விரைந்து வழங்கிட வேண்டும்.
வேளாண் கருவிகள்
வேளாண்மை பொறியியல் துறை மூலம் கலைஞர் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் விவசாயிகளை தேர்வு செய்து போர்வெல் அமைக்க உதவிட வேண்டும். 2022-2023-ம் ஆண்டு பவர் டில்லர் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் சரியான விவசாயிகளை தேர்வு செய்து வேளாண் கருவிகளை வழங்கிட வேண்டும்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் விவசாயத்தை சார்ந்து அதிகம் இருப்பதால் வேளாண் தொடர்புடைய அனைத்து வளர்ச்சி பணிகள் மற்றும் நலத்திட்டங்களை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன், வேளாண் உதவி இயக்குனர்(தரக்கட்டுபாடு) அன்பழகன் மற்றும் அனைத்து வேளாண்மை, தோட்டக்கலை உதவி இயக்குனர்கள், தோட்டக்கலை அலுவலர்கள், உதவி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.