< Back
மாநில செய்திகள்
டெல்டா பகுதியில் விரைவில் விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டை - டி.ஆர்.பி.ராஜா
திருவாரூர்
மாநில செய்திகள்

டெல்டா பகுதியில் விரைவில் விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டை - டி.ஆர்.பி.ராஜா

தினத்தந்தி
|
26 Jun 2023 12:45 AM IST

டெல்டா பகுதியில் விரைவில் விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டை அமைக்கப்படும் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.

மருத்துவ முகாம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆலங்கோட்டை திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பன்னோக்கு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார்.

மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு முன்னிலை வகித்தார். அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முகாமினை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தொழிற்பேட்டை

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு சீரிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக டெல்டா பகுதிகளுக்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். டெல்டா பகுதியில் விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டை அமைக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி டெல்டா பகுதியில் விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டை விரைவில் அமைக்கப்படும்.

முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்டந்தோறும் துறைவாரியாக பல்வேறு நலத்திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மருத்துவ முகாம் நடக்கிறது.

ஆரோக்கியமாக வாழ வேண்டும்

இந்த முகாமில் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை, வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, முழு ரத்த பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மார்பக புற்றுநோயால் அதிக அளவிலான பெண்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

பெண்கள் தயக்கமின்றி தங்கள் உடல் பிரச்சினைகளை டாக்டர்களிடம் கூறி ஆரம்ப நிலையிலேயே நோய்களை குணப்படுத்தி ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஊட்டச்சத்து பெட்டகம்

அதனைத்தொடர்ந்து, டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின்கீழ் 5 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் மதிப்பிலான ஊட்டச்சத்து பெட்டகத்தை அமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஹேம்சந்த் காந்தி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் சோபா கணேசன், கலைவாணி மோகன், ஒன்றியக்குழு உறுப்பினர் செந்தாமரைச்செல்வி, கீழத்திருப்பாலக்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஏழிலரசி மணிசெல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்