சேலம்
விவசாயிகளுடன், அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு
|எடப்பாடி அடுத்த வெள்ளரி வெள்ளி பகுதியில் உள்ள ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்ற விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று நடந்த சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
எடப்பாடி:-
எடப்பாடி அடுத்த வெள்ளரி வெள்ளி பகுதியில் உள்ள ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்ற விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று நடந்த சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
வெள்ளரி வெள்ளி ஏரி
எடப்பாடி ஒன்றியம் வெள்ளரி வெள்ளி கிராமத்தில் எடப்பாடி-நெடுங்குளம் பிரதான சாலையை ஒட்டி சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி அமைந்துள்ளது. மேட்டூர் கிழக்குகரை கால்வாய் பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் குழாய் வழியாக இந்த ஏரிக்கு கொண்டு வரப்பட்டு நிரப்பப்படுகிறது.
இதனால் ஆண்டு முழுவதும் நீர் நிரம்பி காணப்படும். இந்த ஏரியை சுற்றி சுமார் ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்த நிலையில் நடப்பாண்டில் மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு கரை கால்வாய் பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததாலும், இந்த பகுதியில் பெய்த தொடர் கனமழையாலும் வெள்ளரி வெள்ளி ஏரி தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிய தொடங்கியது.
பொதுமக்கள் சிரமம்
தொடர்ந்து ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வந்த நிலையில், ஏரியின் மறுகரை பகுதியில் பகுதியில் அமைந்துள்ள பிரதான சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓட தொடங்கி உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள வேட்டுவப்பட்டி, புதுப்பட்டி, பாசகுட்டை, வேப்பமரத்துப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டது.
குறிப்பாக பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் ஏரி நீரை கடக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வரும் நிலை ஏற்பட்டது.
விவசாயிகள் எதிர்ப்பு
இதையறிந்து மாவட்ட நிர்வாகம் வெள்ளரி வெள்ளி ஏரியின் பிரதான மதகுப்பகுதியின் உயரத்தை குறைக்க முடிவு செய்ததாக தெரிகிறது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
அவ்வாறு மதகின் உயரத்தை குறைக்கும் நிலையில் அதிகப்படியான ஏரி நீர் வெளியேறி விளை நிலங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் என்பதால், மதகின் உயரத்தை குறைக்க கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
அதிகாரிகள் சமரசம்
இதையடுத்து எடப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் என்.எஸ்.ரவிச்சந்திரன் தலைமையிலான அலுவலர்கள் ஏரியின் மதகு பகுதியை நேற்று நேரில் பார்வையிட்டனர். தொடர்ந்து அப்பகுதி விவசாயிகளுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதி வழியாக செல்லும் உபரிநீர் கால்வாயை தூர்வாரி ஆழப்படுத்தி தர அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனா. இதையடுத்து அப்பகுதியில் உள்ள உபரிநீர் கால்வாயை தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதனால் அடுத்த ஒரு சில நாட்களில் வெள்ளரி வெள்ளி ஏரியின் மதகு பகுதியில் இருந்து கூடுதலான அளவு தண்ணீர் வெளியேற்ற வாய்ப்புள்ளதாகவும், இதனால் மறுகரை பகுதியில் உள்ள பிரதான சாலையில் வெளியேறும் உபரி நீர் தடுத்து நிறுத்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
====