< Back
மாநில செய்திகள்
அக்னிபத் திட்டம்: இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
மாநில செய்திகள்

அக்னிபத் திட்டம்: இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தினத்தந்தி
|
30 Jun 2022 12:10 PM IST

அக்னிபத் திட்டத்தில் பணியாற்றும் இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்து உள்ளார்.

மதுரை,

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. தற்போது அக்னிபத் திட்டத்தின் மூலம் தேசத்தின் நலனுக்காக இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு உருவாகி உள்ளது. பாரதப் பிரதமர் இளைஞர்களுக்காக 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அக்னிபத் என்ற திட்டத்தை வெளியிட்டார். அக்னிபத் என்பது போர்க்களப்பணி என்பதாகும்.

இந்த திட்டத்தில் ராணுவம், கடற்படை, விமானப்படை உள்ளது. வரும் 90 நாட்களில் 46,000 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்தத் திட்டத்திற்கு 17 முதல் 21 வரை வயதுவரம்பு உள்ளது. தற்பொழுது இந்த ஓராண்டுக்கு மட்டும் சிறப்பு நிகழ்வாக 23 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் பத்தாண்டுகளோ அதற்கு மேலாக பணியாற்ற முடியாது. இந்த பணியில் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே பணியாற்ற முடியும். அவர்களின் மாத சம்பளத்தில் 30 சதவீத தொகையை பங்களிப்பாக பிடித்து செய்யப்படும் நான்கு ஆண்டுகள் கழித்து பணி நிறைவுக்கு பிறகு அவர்களின் பிடித்தம் செய்யப்பட்ட தொகையுடன் அரசின் பங்களிப்பு தொகையாக இணையாக மத்திய அரசு வட்டியோடு சேர்த்து ரூ. 11.71 லட்ச வழங்குகிறது.

இதன் மூலம் இளைஞர்கள் சுயதொழில் தொடங்க முடியும் வாழ்வில் நம்பிக்கை ஆதாரமாக விளங்கும்.

அக்னிபத் திட்டத்தில் பணியாற்றும் இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது. துணை ராணுவ படைகள், மத்திய, மாநில போலீஸ் பணிகளில் வேலைவாய்ப்பு கிடைப்பது மட்டுமல்லாது, பொதுத்துறை தேர்வுகளில் 10 சதவீதம் பேருக்கு ஒதுக்கப்படவுள்ளது. சமுதாயத்தில் சிறந்த இளைஞர் படையாக உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த திட்டம் இளைஞர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்.

இளைஞர்களுக்கு புரிதல் இல்லாத காரணத்தால் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இளைஞர்கள் இதை முழுமையாக புரிந்து கொண்டு அக்னிபத் திட்டத்தில் சேர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்