< Back
மாநில செய்திகள்
மாநகராட்சி மன்ற கூட்டத்தில் பரபரப்பு: அ.தி.மு.க. ஆட்சியில் நட்சத்திர ஓட்டல்களுக்கு சொத்துவரி கணிசமாக குறைப்பு
சென்னை
மாநில செய்திகள்

மாநகராட்சி மன்ற கூட்டத்தில் பரபரப்பு: அ.தி.மு.க. ஆட்சியில் நட்சத்திர ஓட்டல்களுக்கு சொத்துவரி கணிசமாக குறைப்பு

தினத்தந்தி
|
29 April 2023 10:10 AM IST

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நட்சத்திர ஓட்டல்களுக்கான சொத்துவரி கணிசமாக குறைக்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி கணக்கு குழு தலைவர் தனசேகரன் குற்றம்சாட்டினார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் ஏப்ரல் மாதத்துக்கான மன்றக்கூட்டம், ரிப்பன் மாளிகையில் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, துணை மேயர் மகேஷ் குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதைத்தொடர்ந்து, நேரமில்லா நேரத்தில் கணக்கு குழு தலைவர் தனசேகரன் பேசுகையில், 'சென்னையில் இயங்கி வரும் நட்சத்திர ஓட்டல்களின் சொத்துவரி ஏய்ப்பு குறித்து பல புகார்கள் பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டதில், பல நட்சத்திர ஓட்டல்களின் சொத்துவரிகள் கிட்டதட்ட 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆய்வு செய்ததில் 9 ஓட்டல்களின் வரிகள் பல மடங்கு குறைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பல கோடி மாநகராட்சிக்கு வரி வருவாயில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற முறைகேடுகளை குழு அமைத்து விசாரிக்க வேண்டும். வரி ஏய்ப்பு தொகையை அபராதத்துடன் வசூலிக்க வேண்டும். முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

இதற்கு மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி பதில் அளித்து பேசும்போது, 'கடந்த காலத்தில் ஓட்டல், ஆஸ்பத்திரி, தியேட்டர், திருமண மண்டபங்கள் சிறப்பு பிரிவில் இருந்தது. பின்னர், இது வர்த்தக பிரிவுக்கு கொண்டுவரப்பட்டது. நீங்கள் உங்களுடைய தகவல்களை கொடுத்தால் அதிகாரிகள் குழுவை அனுப்பி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கவுன்சிலர்களின் ஆலோசனைப்படி வருவாய் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. 2021-ம் ஆண்டு மார்ச் மாத கணக்கின் படி சொத்துவரி வருவாய் ரூ.778 கோடியாக இருந்தது. இது 2022-23-ம் ஆண்டில் ரூ.1,522 கோடியாக அதிகரித்துள்ளது. அனைத்து வரிகளையும் கணக்கிட்டு பார்த்தால் கடந்த வருடம் ரூ.1,298 கோடியாக இருந்தது. இது இந்த வருடம் ரூ.2,142 கோடியாக அதிகரித்துள்ளது' என்றார்.

காங்கிரஸ் கவுன்சிலர்கள் எதிர்ப்பு:

சென்னை மாமன்ற கூட்டம் தொடங்கியதும், காங்கிரஸ் கவுன்சிலர்கள் எம்.எஸ்.திரவியம், ராஜசேகரன் ஆகியோர் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக சட்ட திருத்தத்தால் சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் பாதிப்பு ஏற்படக்கூடும். அதனால், அந்த சட்ட திருத்தத்தில் சென்னை மாநகராட்சிக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது, மேயர் ஆர்.பிரியா, 'முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும்' என்று உறுதியளித்தார்.

மேலும் செய்திகள்