மயிலாடுதுறை
கூடுதல் டாக்டர்களை நியமிக்க வலியுறுத்தி போராட்டம்
|அரசினர் ஆஸ்பத்திரி மகப்பேறு பிரிவில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை ராஜாஜி ஆஸ்பத்திரி டாக்டர்களை மாநகராட்சி ஊழியர்கள் தரக்குறைவாக பேசியதை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று டாக்டர்கள் ஒரு மணி நேரம் கருப்பு பேட்ச் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி மயிலாடுதுறை அரசினர் பெரியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் கருப்பு பேட்ச் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த போராட்டத்தில் மயிலாடுதுறை அரசினர் ஆஸ்பத்திரியின் கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆஸ்பத்திரியில் நாள் ஒன்றுக்கு 20 பிரசவம் என மாதத்திற்கு 600-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெற்று வருகிறது. ஆனால் 8 மகப்பேறு டாக்டர்கள் பணியில் இருந்த நிலையில் பலர் பணி மாற்றத்திலும், விடுப்பிலும் சென்றுவிட்ட காரணத்தால் தற்போது 2 டாக்டர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இதனால் ஏற்படும் பணிச்சுமை காரணமாக டாக்டர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். இதனால் உடனடியாக ஆஸ்பத்திரியில் கூடுதல் மகப்பேறு டாக்டர்கள் நியமிக்க வேண்டும் என இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் அனைத்து துறை டாக்டர்களும் மகப்பேறு டாக்டர் பிரபா தலைமையில் கருப்பு பேட்ச் அணிந்து ஒரு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.