திருவள்ளூர்
வயதான தம்பதியை ஏமாற்றி மோசடி ஆருத்ரா நிதி நிறுவன முகவர் கைது
|வயதான தம்பதியை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக ஆருத்ரா நிதி நிறுவன முகவர் கைது செய்யப்பட்டார்.
சென்னையை மையமாக கொண்டுள்ள ஆருத்ரா நிதி நிறுவனம் சென்னை, காஞ்சீபுரம் திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் லட்சக்கணக்கான பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ஆருத்ரா நிதி நிறுவன இயக்குனர், முகவர்கள் என பலர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில், செய்யார், உத்திரமேரூர் மற்றும் மானாமதி பகுதிகளில் ஆருத்ரா நிதி நிறுவன முகவர் நாகராஜ் என்பவர் காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓரிக்கை ஜெம் நகர் அருகாமையில் வசித்து வரும் முதியோர்களான ஸ்டீபன் (63) மற்றும் சுகுணா தேவி (59) தம்பதியின் வீட்டை ரூ.26 லட்சத்திற்கு தனது பெயருக்கு நாகராஜ் மாற்றியுள்ளார். அதில் ரூ.6 லட்சத்தை முதிவயர் ஸ்டீபனின் வங்கி கணக்கில் செலுத்தி விட்டு, மீதமுள்ள ரூ.20 லட்சத்தை ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு ஆருத்ரா நிதி நிறுவனத்தில் ரூ.20 லட்சம் முதலீடு செய்து 3 மாதங்கள் மட்டுமே மாதம் ரூ.1 லட்சம் கிடைத்த நிலையில், கடந்த 2022 ஏப்ரல் மாதம் ஆருத்ரா நிதி நிறுவனம் மோசடி அம்பலமாகி வங்கி கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கினர்.
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் காஞ்சீபுரத்தை சேர்ந்த முகவர் நாகராஜ் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் முகவர் நாகராஜ் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் நாகராஜ் ஒரு சிலருடன் ஸ்டீபன், சுகுணா தேவி வசிக்கும் வீட்டுக்கு சென்று அவர்களின் செல்போனை பறித்து கொண்டு அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றினர். வீட்டில் இருந்த பொருட்களை வெளியே தூக்கி வீசி விட்டு வீட்டின் கதவை பூட்டிவிட்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேசில் ஆனந்த் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்து காஞ்சீபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.