< Back
மாநில செய்திகள்
வளவனார் வடிகாலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை
திருவாரூர்
மாநில செய்திகள்

வளவனார் வடிகாலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை

தினத்தந்தி
|
22 Sept 2023 12:15 AM IST

திருத்துறைப்பூண்டி வளவனார் வடிகாலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி வளவனார் வடிகாலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயம் மட்டுமே...

காவிரி டெல்டா மாவட்டங்களில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள பகுதி. இந்த பகுதியில் வேறு எந்தவித தொழிற்சாலைகளும் கிடையாது. மேலும் நெல்லை தவிர வேறு மாற்று பயிர்களை பயிரிட முடியாத சூழல் உள்ளது. கர்நாடகாவில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டு ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, வாய்க்கால்கள், ஆறுகள் தூர்வாரப்பட்டு கடைமடை வரை தண்ணீர் வந்து, பருவமழையும் சரியாக பெய்தால் மட்டுமே முப்போக சாகுபடி நடைபெறும்.

ஆனால் பல ஆண்டுகளாக பருவமழையும் சரியாக பெய்வதில்லை. கர்நாடகாவில் இருந்தும் உரிய தண்ணீர் வழங்குவது இல்லை. ஜூன் மாதம் 12-ந் தேதி திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை வருவதில்லை.

ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமிப்பு

இப்படி பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் விவசாயிகளுக்கு, மேலும் ஒரு பிரச்சினையாக திருத்துறைப்பூண்டி விவசாயிகளின் வாழ்வாதாரமாக கருதப்படும் முக்கிய ஆறுகளில் ஒன்றான வளவனார் வடிகால் வாய்க்காலை ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமித்து உள்ளன. இந்த வடிகால் வாய்க்கால் திருத்துறைப்பூண்டியை சுற்றியுள்ள ராயநல்லூர், விளக்குடி, மேட்டுப்பாளையம், கொத்தமங்கலம், எழிலூர், நுணாக்காடு, ஆட்டூர், பள்ளங்கோவில், கடியாச்சேரி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

அதாவது மேற்கண்ட கிராமங்களில் விவசாயத்தின் போது மழை வெள்ளம் காலங்களில் இந்த ஆற்றின் வழியாகத்தான் தண்ணீர் வடிந்து தொண்டியக்காடு வரை சென்று அங்கு கடலில் கலக்கிறது. இதனால் இந்த ஆறு பயிர்களை காப்பாற்றுவது மட்டும் இல்லாமல் விவசாய நிலங்களையும் காத்து, அங்குள்ள குடியிருப்புகளையும் காப்பாற்றுகிறது.

தடையின்றி தண்ணீர் செல்ல...

இந்த நிலையில் இந்த வளவனார் வடிகால் முழுவதும் ஆகாயத்தாமரைகள் வளர்ந்துள்ளன. இதனால் ஆற்றில் தண்ணீர் செல்ல முடியாத மிகவும் மோசமான நிலை உள்ளது. இதனால் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விவசாயிகள் நலன் கருதி வளவனார் வடிகாலில் தடையின்றி தண்ணீர் செல்வதற்கு ஏதுவாக வளவனார் வடிகாலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்