ராமநாதபுரம்
படகில் தப்பி வந்து நேராக போலீஸ் நிலையத்தில் ஆஜரான 4 அகதிகள்
|இலங்கையில் இருந்து படகில் தப்பி தனுஷ்கோடிக்கு வந்து, நேராக போலீஸ் நிலையத்தில் ஆஜரான ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 அகதிகள் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
ராமேசுவரம்,
இலங்கையில் இருந்து படகில் தப்பி தனுஷ்கோடிக்கு வந்து, நேராக போலீஸ் நிலையத்தில் ஆஜரான ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 அகதிகள் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இலங்கையில் இருந்து வந்தனர்
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு மக்கள் பல்வேறு கஷ்டங்களை சந்தித்து வருகின்றனர். ஏற்கனவே கடந்த சில மாதங்களில் தனுஷ்கோடிக்கு 129 பேர் அகதிகளாக வந்து, ராமேசுவரத்தை அடுத்த மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை மன்னார் பகுதியில் இருந்து பிளாஸ்டிக் படகு ஒன்றின் மூலம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் புறப்பட்டு தனுஷ்கோடி கடற்கரைக்கு வந்துள்ளனர். அங்கிருந்து நேரடியாக ஒரு ஆட்டோவில் ஏறி மண்டபம் கடலோர காவல் நிலையம் வந்து ஆஜராகினர்.
தீவிர விசாரணை
அகதிகளிடம் கடலோர போலீசார் மற்றும் மத்திய-மாநில உளவுப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
அவர்கள் இலங்கை திரிகோணமலை பகுதியை சேர்ந்த ஜெயமாலினி (வயது50), இவரது மகன்கள் பதுர்ஜன் (26), ஹம்சிகன் (22), மகள் பதுஷிகா (19) என்பது தெரியவந்தது.
ஏற்கனவே இவர்கள் கடந்த 2006-ம் ஆண்டு தமிழகத்திற்கு வந்து 13 ஆண்டுகள் இருந்துவிட்டு மீண்டும் 2019-ம் ஆண்டு விமானம் மூலம் இலங்கை சென்றவர்கள் என்பதும், தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் தமிழகத்திற்கு தப்பி வந்ததாகவும் தெரியவந்தது.
இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு பின்னர், நேற்று வந்த 4 அகதிகளுடன் சேர்த்து இதுவரையிலும் தனுஷ்கோடிக்கு 133 பேர் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சை
வழக்கமாக இலங்கையில் இருந்து அகதிகளாக வருகிறவர்கள் தனுஷ்கோடியில் வந்திறங்கியதும், கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நேரடியாக அவர்கள் அங்கு சென்று விசாரணை நடத்துவார்கள். அதன்பின்னர் வாகனத்தில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று மீண்டும் சில விசாரணைகளை முடித்த பின்னரே, அகதிகள் முகாமில் ஒப்படைப்பார்கள். ஆனால், நேற்று வந்த 4 பேரும் நேரடியாக போலீசில் ஆஜரானது சர்ச்சையை ஏற்படுத்தியது. தனுஷ்கோடி கடலோர பகுதியில் 4 பேர் வந்திறங்கியது யாருக்கும் தெரியாமல் போனது எப்படி? என்பது குறித்தும் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கிடையே அந்த 4 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர்.