சென்னை
25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் படம் இயக்க வரும் ஹாலிவுட் நடிகர் ஜானிடெப்
|ஹாலிவுட் நடிகர் ஜானிடெப் 25 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் படம் இயக்கப்போவதாக அறிவித்து உள்ளார்.
'பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்' படத்தில் ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ்பெற்ற நடிகராக உயர்ந்தவர் ஜானிடெப். இவர், நடிகை ஆம்பர் ஹெர்ட்டை காதலித்து 2015-ல் திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இல்லற வாழ்க்கையில் தன்னை கொடுமைப்படுத்தியதாக ஜானிடெப் மீது ஆம்பர் ஹேர்ட் குற்றம் சாட்டினார். இதனால் பட வாய்ப்புகள் குறைந்ததால் ஆம்பர் ஹேர்ட் மீது ஜானிடெப் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஜானி டெப்புக்கு ஆதரவாக கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் ஜானிடெப் படம் இயக்க வருகிறார். இவர் கடந்த 1997-ம் ஆண்டு 'தி பிரேவ்' என்ற படத்தை டைரக்டு செய்து இருந்தார். 25 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் படம் இயக்கப்போவதாக அறிவித்து உள்ளார். 1884-ல் இருந்து 1920-ம் ஆண்டு வரை வாழ்ந்த இத்தாலியின் பிரபல ஓவியரும் சிற்பியுமான அமெடியோ மோடிக்லியானியின் வாழ்க்கை கதையை இயக்குகிறார். உலகளாவிய மனிதரான மோடிக்லியானியின் வாழ்க்கை கதையை படமாக்குவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஜானிடெப் கூறியுள்ளார்.