சேலம்
20 ஆண்டுகளுக்கு பிறகு மீராசாகிப் ஏரி நிரம்பியது
|ஆட்டையாம்பட்டி அருகே உள்ள மீராசாகிப் ஏரி 20 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது.
பனமரத்துப்பட்டி:-
ஆட்டையாம்பட்டி அருகே உள்ள மீராசாகிப் ஏரி 20 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது.
மீராசாகிப் ஏரி
ஆட்டையாம்பட்டி அருகே உள்ள சென்னகிரி ஊராட்சி எஸ்.பாலம் மீராசாகிப் ஏரி 60 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தற்போது ஆக்கிரமிப்பு மற்றும் நீர் வழிப்பாதை அடைப்பு காரணமாக சுமார் 25 ஏக்கர் மட்டுமே பரப்பளவு உடையதாக காணப்படுகிறது.
இந்த ஏரிக்கு அரியானூர் கஞ்சமலை பகுதியில் இருந்து சீரகாபாடி, கடத்தூர் அக்ரஹாரம், எட்டிமாணிக்கப்பட்டி வழியாக நீர் வந்து கொண்டு இருந்தது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையின் போது இந்த ஏரி நிரம்பியது. அதன் பிறகு ஆக்கிரமிப்பு, நீர்வழிப் பாதை அடைப்பு காரணமாக ஏரிக்கு நீர் வருவது முற்றிலும் தடைப்பட்டு போனது.
நிரம்பியது
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் புதிய நீரூற்றுகள் உருவானது. இதன் காரணமாக இந்த ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதைத்தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டி ஏரி நிரம்பி, உபரி நீர் வழிந்தோடியது. இதனால் ஏரிக்கு அருகில் உள்ள அருந்ததியர் காலனி பகுதிக்கு செல்லும் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
ேமலும் அந்த பகுதியில் வசித்து வரும் 30 குடும்பங்களை சேர்ந்த மக்கள் தங்கள் பகுதிக்கு செல்ல சுமார் 2 கிலோமீட்டர் சுற்றிக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் ஏரி நிரம்பியதால், சுற்றுப்புற பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேலும் ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால், ஆண்டுதோறும் ஏரி நிரம்ப வாய்ப்பு உள்ளது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.