விருதுநகர்
2 ஆண்டுகளுக்கு பிறகு களை கட்டிய வியாபாரம்
|நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆயுதபூஜை இன்று கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆயுதபூஜை இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வீடுகள், கடைகளில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்துவது வழக்கம்.
அலைமோதிய கூட்டம்
இந்த பூஜையின் போது அவல், பொரிகடலை, சர்க்கரை, தேங்காய், பழங்கள் உள்ளிட்டவை வைத்து படையலிட்டு வழிபாடு நடத்துவர்.
இந்த பூஜை பொருட்களை வாங்குவதற்காக விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி, சாத்தூர், காரியாபட்டி, அருப்புக்கோட்டை, வத்திராயிருப்பு, தாயில்பட்டி, ஏழாயிரம்பண்ணை, ஆலங்குளம், திருச்சுழி, நரிக்குடி, தளவாய்புரம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பூக்கடை, பழக்கடை, பூஜை பொருட்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பொருட்களை வாங்கி செல்வதை காண முடிந்தது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் இல்லை. ஆனால் இந்த ஆண்டு கொரோனாவின் தாக்கம் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியுடன் பொருட்களை வாங்கி சென்றனர்.
விலை அதிகரிப்பு
இதுகுறித்து வியாபாரிகள், பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
திருத்தங்கல் இல்லத்தரசி பேச்சியம்மாள்:- ஆயுதபூஜையையொட்டி வீட்டில் பூஜை செய்வதற்காக பழங்கள் மற்றும் பூஜை பொருட்களைவாங்கினோம். வழக்கத்தை விட பழங்களின் விலை அதிகமாக இருந்தது. அதிலும் குறிப்பாக ஆப்பிள், மாதுளை, கொய்யா, கமலா ஆரஞ்சு, சாத்துக்குடி, ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்து இருந்தது. அதேபோல் பூக்களின் விலையும் அதிகமாக இருந்தது.
வத்திராயிருப்பு சண்முகவேல்:- கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக கடைவீதிகளில் மக்கள் கூட்டம் இல்லை. இந்த ஆண்டு பூக்கள், பழங்கள், காய்கறி ஆகியவற்றின் விலை அதிகரித்து இருந்தது. 2 ஆண்டுகளுக்கு பிறகு களை கட்டிய வியாபாரத்தால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பொரி வியாபாரி ராமசாமி:- கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்ததால் கடந்த 2 ஆண்டுகளாக கடை போடவில்லை. இந்த ஆண்டு விற்பனை நன்றாக உள்ளது. வழக்கத்தை காட்டிலும் மக்களின் கூட்டம் அதிகரித்து உள்ளது. ஒரு படி பொரி ரூ.10-க்கும், பொரிகடலை ரூ.100-க்கும், அவல் ரூ.70-க்கும் விற்பனை செய்கிறோம்.
பாதிப்பு
வத்திராயிருப்பு பழ வியாபாரி முத்துச்செல்வி:-
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று காரணமாக பழ வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு வியாபாரம் நன்றாக இருக்கும் என நினைத்து பழங்களை விற்பனைக்காக வாங்கினோம். ஆனால் எதிர்பார்த்த வியாபாரம் இல்லை. கொள்முதல் செய்த பழத்தினை விற்பனை செய்வதற்கு வழியின்றி தவிக்கிறோம்.
பழங்களின் வரத்து குறைந்தது
தாயில்பட்டி வியாபாரி ரத்தினம்:-
பழங்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது. ஆப்பிள் ஒரு கிலோ ரூ.100-ல் இருந்து ரூ.130-க்கும், ஆரஞ்சு கிலோ ரூ.40-ல் இருந்து ரூ.60-க்கும் விற்பனையானது. நாட்டு வாழைப்பழம் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது. ஒரு மூடை ரூ.200 அதிகரித்து ரூ.600-க்கு விற்பனை ஆனது. இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
விருதுநகர் வியாபாரி குட்டி என்ற ராமச்சந்திரன்:-
ஆயுத பூஜையை முன்னிட்டு கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு இருந்தாலும் பூஜைக்கான பொருட்கள் விற்பனை நடந்தது. ஆனாலும் விற்பனை குறைவாக இருந்தது. கடந்த ஆண்டு வாழை சாகுபடி செய்த விவசாயிகள் விற்பனை குறைவான காரணத்தால் வெங்காய சாகுபடிக்கு மாறிவிட்ட நிலையில் தற்போது வாழை பழ வரத்து குறைவாக உள்ளது. ஆப்பிள் கிலோ ரூ.120, ஆரஞ்சு ரூ.80 முதல் ரூ.120 வரையிலும், பன்னீர், திராட்சை ரூ. 80 வரையிலும் விற்பனை ஆனது.
பூக்கள் விலை உயர்வு
விருதுநகர் பூ வியாபாரி கோபாலகிருஷ்ணன்:-
விஜயதசமியை முன்னிட்டு கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் பூ விற்பனை குறைவாக இருந்த நிலையில் தற்போது பூ விற்பனை அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பையொட்டி பலர் பூ சாகுபடியை கைவிட்டு விட்ட நிலையில் பூ வரத்து மிகவும் குறைவாக உள்ளது. மல்லிகைப்பூ கிலோ ரூ.1500 வரையும் விற்பனையானது. வழக்கமாக செண்டுமல்லி ரூ.50-க்கு விற்பனை ஆகும். நேற்று ரூ.80-க்கு விற்பனை ஆனது. ரூ.120-க்கு விற்பனை ஆன ரோஜா ரூ.400-க்கு விற்பனையானது. விருதுநகர் பேராலி கிராமத்தில் இருந்து மாலைக்கான பச்சை கொண்டு வருவார்கள். கிலோ ரூ.30 ஆக இருந்த பச்சை தற்போது ரூ. 60 ஆக விற்பனை செய்யப்படுகிறது. விலை கூடுதலாக இருந்தாலும் விற்பனை கடந்த ஆண்டை விட அதிகரித்து தான் உள்ளது. பெங்களூருவில் இருந்து பூ வரவில்லை என்றால் பூ விலை இன்னும் அதிகரித்திருக்கும்.
அருப்புக்கோட்டை பூ வியாபாரி மீனாட்சி கூறுகையில்,
ஆயுத பூஜை விழாவை முன்னிட்டு பூக்கள் விற்பனை அமோகமாக உள்ளது. வழக்கத்தை காட்டிலும் பூக்களின் விலை நேற்று அதிகரித்து காணப்பட்டது. விலை அதிகமாக இருந்தாலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பூக்கள் வாங்கி சென்றனர். பூக்கள் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.