2 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பரங்குன்றம் கோவிலில் உலக நலன் வேண்டி 1008 திருவிளக்குபூஜை
|திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உலக நலன் வேண்டி நடைபெற்ற 1008 திருவிளக்கு பூஜையில் பெண் பக்தர்கள் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.
திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கடைசி ஆடிவெள்ளி அன்று உலக நலன் வேண்டியும், விவசாயம் செழிக்க மழை பெய்ய வேண்டியும் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் உலகத்தையே உலுக்கிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் கடந்த 2 ஆண்டுகள் 1008 திருவிளக்கு பூஜை நடைபெறவில்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கடைசி ஆடிவெள்ளியான இன்று உலக நலனுக்காக 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.
இதனையொட்டிரூ.100 செலுத்தி முன்பதிவாக டோக்கன் பெற்ற பக்தர்கள் ஒவ்வொருவரும் தங்களது வீட்டில் இருந்து குத்து விளக்குகளுடன் வந்து கோவிலுக்குள் குவிந்தனர்
பின்னர் அவர்கள் தங்களது ஒதுக்கப்பட்டு இருந்த மண்டபத்தில் வரிசையாக அமர்ந்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் உபயமாக பெறப்பட்ட பூஜை பொருட்களை பெண் பக்தர்களுக்கு கொடுத்தனர்.
இதனையடுத்து திருவாட்சி மண்டபத்தில் கோவில் சிவாச்சாரிகள் சுவாமிநாதன், ராஜா என்ற சந்திரசேகர், ரமேஷ் ஆகியோர் வேத மந்திரங்கள் முழங்கி வெள்ளியிலான சுமார் 7அடி உயரமுள்ள விளக்கிளை ஏற்றினர்.
உடனே பெண் பக்தர்கள் விளக்கினை ஏற்றி வழிபட்டனர். விளக்கு ஏற்றப்பட்டதும் கோவில் முழுவதுமாக ஒளிவெள்ளத்தில் பிரகாசித்தது. அவை கண்கொள்ளா காட்சியாக இருந்தது