< Back
மாநில செய்திகள்
எலவனூரில் 19 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த எருது ஓட்டம் நிகழ்ச்சி
கரூர்
மாநில செய்திகள்

எலவனூரில் 19 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த எருது ஓட்டம் நிகழ்ச்சி

தினத்தந்தி
|
2 July 2023 12:29 AM IST

சின்னதாராபுரம் அருகே உள்ள எலவனூரில் 19 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய மாலை திருவிழாவையொட்டி எருது ஓட்டம் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.

பெரிய மாலை திருவிழா

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள எலவனூரில் வீர கொண்டவன நாயக்கர், மாட்டுக்கார சாமி, வீரபொம்மக்காள், வீரஜக்கம்மாள், வீரசின்னக்கல் சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பெரிய மாலை திருவிழா நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிகழ்ச்சி நடந்தது. தற்போது கடந்த 16-ந் தேதி இரவு அனைத்து பக்தர்களுக்கும் மஞ்சள் முடிப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் பெரிய மாலை திருவிழா தொடங்கியது.

கடந்த 27-ந்தேதி காலை கோவிலில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொத்துக்கொம்பு சாமிக்கு 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் உடம்பில் சந்தனம் பூசி, தலையில் உருமா கட்டி, கையில் கம்புடனும் அருளுடன் நேருக்கு நேராக கொத்து கொம்பு சாமி இருக்கும் இடத்திற்கு சென்று சிறப்பு பூஜை செய்து சாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து 30-ந் தேதி அனைத்து சாமிகளுக்கும் சிறப்பு பூஜையும் நடந்தது.

எருது ஓட்டம் நிகழ்ச்சி

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை எருது ஓட்டம் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து முதலில் எலவனூரை சேர்ந்த மணல் நாட்டு மந்தை நாயக்கர்கள் மற்ற மந்தையாளர்களை சந்தித்தல் நிகழ்ச்சி நடந்தது. மாலை 4 மணிக்கு கோவிலில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொத்துக்கொம்பு சாமி இருக்கும் இடத்தில் இருந்து எருது ஓட்டம் நிகழ்ச்சி நடந்தது.

இதில் 100-க்கும் மேற்பட்ட எருதுகள் கலந்து கொண்டு எல்லை கோட்டை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடி வந்தன. இதில் திருச்சி மாவட்டம், ராஜகோடங்கிப்பட்டி மந்தையை சேர்ந்த எருது முதலாவதாக வந்தது. 2-வதாக கரூர் மாவட்டம், ஜெகதாபி அருகே உள்ள அய்யம்பாளையத்தைச் சேர்ந்த மந்தை எருது வந்தது. இதையடுத்து முதலில் வந்த எருதுவிற்கு கோவில் சார்பில் எலுமிச்சம் பழமும், மஞ்சள் முடிப்பும் பரிசாக வழங்கப்பட்டன.

வரவேற்பு

முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை, அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. மொஞ்சனூர் பி.ஆர்.இளங்கோ, முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோருக்கு கோவில் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்களும், வீரபாண்டிய கட்டபொம்மன் நற்பணி மன்றமும் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்