< Back
மாநில செய்திகள்
சிறுமியின் உடல்  14 நாட்களுக்கு பின் மறு பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைப்பு
கரூர்
மாநில செய்திகள்

சிறுமியின் உடல் 14 நாட்களுக்கு பின் மறு பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைப்பு

தினத்தந்தி
|
9 Jun 2023 12:27 AM IST

நச்சலூர் அருகே கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சிறுமியின் உடல் கோர்ட்டு உத்தரவுப்படி 14 நாட்களுக்கு பின் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிறுமி பிணமாக மீட்பு

கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே நங்கவரம் பேரூராட்சி சவாரிமேட்டை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி கலைவாணி. இந்த தம்பதிக்கு தேவிகா (வயது 16), விக்னேஸ்வரி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்குமுன்பு தங்கராஜ் பிரிந்து சென்று விட்டார். இந்தநிலையில் கலைவாணி தனது மகள்களுடன் சவாரிமேட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த 24-ந்தேதி வீட்டில் இருந்த தேவிகாவை நள்ளிரவில் காணவில்லை. இந்நிலையில் கடந்த 26-ந்தேதி தேவிகா ஊருக்கு அருகாமையில் உள்ள விவசாய கிணற்றில் பிணமாக கிடந்தார். இதையடுத்து குளித்தலை போலீசார் தேவிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தேவிகாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் தேவிகாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

3 பேர் கைது

பின்னர் கலைவாணி தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து சவாரிமேட்டை சேர்ந்த நங்கவரம் பேரூராட்சி தி.மு.க. 6-வது வார்டு கவுன்சிலர் குணசேகர் (53), குணசேகரனின் மைத்துனர் முத்தையன் (51), 18 சிறுவன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.

மறு பிரேத பரிசோதனை

இதையடுத்து சிறுமியின் தாய் மதுரை ஐகோர்ட்டில் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அதனால் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளார். இந்தமனுவை விசாரித்த நீதிபதி தேவிகாவின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யும் போது டாக்டர்கள் வீடியோ பதிவு செய்ய வேண்டும். பின்னர் உடலை மனுதாரரிடம் கொடுக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் திருச்சி அரசு மருத்துவமனையில், தலைமை மருத்துவ குழுவினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆகியோர் மத்தியில் தேவிகாவின் உடல் வீடியோ ஆதாரத்துடன் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

உடல் ஒப்படைப்பு

பின்னர் அதிகாலை 2.30 மணி அளவில் தேவிகாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து தேவிகாவின் உடல் அவரது சொந்த ஊரான சவாரி மேட்டிற்கு கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்தனர்.மறு பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே சிறுமி கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்ற முழுவிவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். 14 நாட்களுக்கு பின்னர் தேவிகாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்