திருவள்ளூர்
10 ஆண்டுகளுக்கு பிறகு கத்தியால் வெட்டிய வழக்கில் வாலிபருக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் - திருத்தணி கோர்ட்டு தீர்ப்பு
|10 ஆண்டுகளுக்கு பிறகு கத்தியால் வெட்டிய வழக்கில் வாலிபருக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து திருத்தணி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த வி.என்.அருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அல்லிமுத்து. இவரது மகன் விக்கி (வயது 22). கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அதே கிராமத்தை சேர்ந்த வேதநாயகம் (வயது 45) என்பவர் குடிபோதையில் விக்கி வீட்டிற்குச் சென்று அங்கிருந்த விக்கியின் மனைவி மற்றும் தங்கையை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். அப்போது அங்கு வந்த விக்கிக்கும் வேலாயுதத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வேலாயுதம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விக்கியின் முகத்தில் வெட்டியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த விக்கி திருத்தணி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து விக்கி அளித்த புகாரையடுத்து, கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலாயுதத்தை கைது செய்தனர். இந்த வழக்கு திருத்தணி சார்பு நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்தது. இந்த வழக்கில் வாதங்கள் முடிவுற்ற நிலையில் சார்பு நீதிபதி காயத்ரிதேவி நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் விக்கியை தாக்கிய வேலாயுதத்திற்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம் கட்ட தவறினால் 15 நாட்கள் சிறை தண்டனை என தீர்ப்பு வழங்கினார். அரசு தரப்பில் வக்கீல் எஸ்.லட்சுமணன் வாதாடினார்.