< Back
மாநில செய்திகள்
சென்னை ஓட்டேரியில் அழகுகலை பெண் நிபுணர் தற்கொலை வழக்கில் ஆப்பிரிக்கா வாலிபர் கைது
சென்னை
மாநில செய்திகள்

சென்னை ஓட்டேரியில் அழகுகலை பெண் நிபுணர் தற்கொலை வழக்கில் ஆப்பிரிக்கா வாலிபர் கைது

தினத்தந்தி
|
16 July 2023 3:33 PM IST

சென்னை ஓட்டேரியில் அழகுகலை பெண் நிபுணர் தற்கொலை வழக்கில் ஆப்பிரிக்காவை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை ஓட்டேரி, நம்மாழ்வார்பேட்டை, பராக்கா சாலை முதல் தெருவைச் சேர்ந்தவர் அஸ்வினி (வயது 20). பி.பி.ஏ. பட்டதாரியான இவர், அழகுகலை நிபுணராக பணியாற்றி வந்தார். கடந்த 6-ந் தேதி மாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தாய்க்கு எழுதிய கடிதத்தில், "மிஸ் யூ அம்மா, நான் தவறானவள் அல்ல" என்று எழுதி இருந்தார்.

இது குறித்து தலைமைச் செயலக காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் சமூக வலைதளம் மூலம் பழகிய முகம் தெரியாத மர்மநபர், அஸ்வினியிடம் பணம் கேட்டு மிரட்டியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது.

அஸ்வினினுக்கு சமூக வலைதளம் மூலம் லண்டனில் வேலை பார்ப்பதாக கூறி வாலிபர் ஒருவர் அறிமுகம் ஆனார். இருவரும் ஒருவரை ஒருவர் முகம் பார்க்காமல் பழகி வந்ததாக கூறப்படுகிறது. திடீரென அந்த வாலிபர், "நான் உன்னை காதலிக்கிறேன். தமிழ்நாட்டுக்கு வரும்போது உன்னை திருமணம் செய்ய விரும்புகிறேன்" என்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அஸ்வினி, "எனது குடும்ப சூழ்நிலைக்கு லண்டன் மாப்பிள்ளை ஒத்து வராது. நாம் பழகுவதை நிறுத்திவிடலாம்" என்றார்.

அதற்கு சம்மதம் தெரிவித்த வாலிபர், "உனக்கு பரிசு பொருட்கள் அனுப்பி வைக்கிறேன். அதை வாங்கி கொள்" என 'வாட்ஸ்அப்'பில் பரிசு பொருட்கள் அடங்கிய பெட்டியையும், அதன் உள்ளே பையில் கைக்கடிகாரம், வௌிநாட்டு பணம் இருப்பது போன்ற புகைப்படத்தையும் அனுப்பினார்.

அதற்கு அடுத்த சில நாட்களில் அஸ்வினியின் செல்போனில் தொடர்பு கொண்ட மர்மநபர், "நாங்கள் வருமான வரி அலுவலகத்தில் இருந்து பேசுகிறோம். உங்களுக்கு லண்டனில் இருந்து ஒரு பார்சல் வந்துள்ளது. அதற்கு வரி செலுத்த வேண்டும்" என கூறினார்.

அந்த நபர் கூறியபடி 2 தவணையாக ஆன்லைன் மூலம் ரூ.25 ஆயிரம் செலுத்தினார். மேலும் பணம் கேட்டதால் அந்த பரிசு பொருள் வேண்டாம் என அஸ்வினி கூறினார். அதற்கு அந்த நபர், அப்படியானால் "உங்கள் வீட்டுக்கு போலீஸ் விசாரணைக்கு வரும்" என கூறி மிரட்டினார். இதனால் பயந்துபோன அஸ்வினி தற்கொலை செய்தது பின்னர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

மேலும் அஸ்வினி மூலம் பணம் அனுப்பிய செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரித்தபோது அவர், இணையதளம் மூலம் முகம் பார்க்காமல் அவருடன் பழகி வந்த மேற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த மூசா (30) என்பதும், டெல்லியில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருப்பதும் தெரிய வந்தது.

தனிப்படை போலீசார் டெல்லி சென்று அவரை கைது செய்தனர். பின்னர் அவரை சென்னை அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்