பெரம்பலூர்
வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு
|பெரம்பலூர் மாவட்டத்தில் வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் வழக்கறிஞர் சங்கத்தின் கூட்டம் அதன் தலைவர் வள்ளுவன் நம்பி தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றக்கோரி, பெரம்பலூர் பார் அசோசியேஷன் சார்பில் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி வக்கீல்கள் நேற்று நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் வக்கீல்கள் சமூக விரோதிகளால் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவது, தாக்கப்படுவது, மிரட்டப்படுவதை முதல்-அமைச்சர் தடுக்க வேண்டும். குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். நீதிமன்ற வளாகங்களில் வக்கீல்களுக்கும், வழக்கு நடத்துபவர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும். தமிழகம் முழுவதும் வக்கீல்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும். வக்கீல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தின் அவசியத் தேவையை உணர்ந்து, மத்திய, மாநில அரசுகள் உடனடியாக வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. வக்கீல்கள் போராட்டத்தால், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கு விசாரணை பணிகள் ஒத்திவைக்கப்பட்டன.