< Back
மாநில செய்திகள்
சாலையை சீரமைக்க வலியுறுத்தி மண்எண்ணெய் பாட்டிலுடன் தீக்குளிக்க வந்த வக்கீல் கைது
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

சாலையை சீரமைக்க வலியுறுத்தி மண்எண்ணெய் பாட்டிலுடன் தீக்குளிக்க வந்த வக்கீல் கைது

தினத்தந்தி
|
1 Nov 2022 3:28 AM IST

சாலையை சீரமைக்க வலியுறுத்தி மண்எண்ணெய் பாட்டிலுடன் தீக்குளிக்க வந்த வக்கீல் கைது செய்யப்பட்டார்.

களியக்காவிளை:

களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட குழித்துறை சந்திப்பில் இருந்து மடிச்சல் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சுமார் 100 மீட்டர் தூரம் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும், சாலையில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருவதால், அதனை சீரமைக்கக்கோரி தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் குழித்துறை அருகே மடிச்சல் பகுதியைச் சேர்ந்தவரும், மதுரை ஐகோர்ட்டு வக்கீலான புனித தேவகுமார் என்பவர் நேற்று முன்தினம் சாலையை சீரமைக்காவிட்டால் 31-ந்தேதி குழித்துறை சந்திப்பில் தீக்குளிப்பேன் என சமூக வலைதளங்களில் ஒரு கடிதத்தை வெளியிட்டிருந்தார். இதை பார்த்த அதிகாரிகள் போதிய நிதி இல்லை எனவும், விரைவில் சீரமைக்கப்படும் எனவும் தெரிவித்தனர். ஆனால், அதிகாரிகளின் உறுதிமொழியை ஏற்காமல் நேற்று காலையில் புனித தேவகுமார் மண்எண்ணெய் பாட்டிலுடன் குழித்துறை சந்திப்பு பகுதிக்கு வந்தார். இதைக்கண்ட களியக்காவிளை போலீசார் உடனே அவரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் குழித்துறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்