< Back
மாநில செய்திகள்
மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
அரியலூர்
மாநில செய்திகள்

மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

தினத்தந்தி
|
6 May 2023 12:35 AM IST

மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோடை உழவு

அரியலூர் மாவட்டத்தில் சராசரியாக ஆண்டுதோறும் 1 லட்சம் எக்டேரில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றில் 38 ஆயிரம் எக்டேர் பாசன வசதியுடனும், மீதமுள்ள 62 ஆயிரம் எக்டேர் மானாவாரி பயிராகவும் சாகுபடி செய்யப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 954 மில்லி மீட்டர் ஆகும். கோடை காலத்தில் சராசரியாக 83 மில்லி மீட்டர் மழை பெறப்படுகிறது.

தற்போது அரியலூர் மாவட்டம் முழுவதும் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. விவசாயிகள் இம்மழையினை பயன்படுத்தி கோடை உழவு செய்யலாம். கோடை உழவு செய்வதினால் பின்வரும் பயன்களைப் பெறலாம். கோடை உழவு செய்வதினால் மண்ணின் மேற்பரப்பில் உள்ள கடினப்பகுதி உடைக்கப்பட்டு, மண்ணின் நீர் பிடிப்புத்தன்மை அதிகரிக்கிறது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயர ஏதுவாகிறது. கோடை உழவு செய்வதினால், மண்ணானது ஈரமும் மற்றும் காய்ச்சலுமாக இருப்பதினால் மண்ணின் அமைப்பு மேம்படுத்தப்படுகிறது.

மண்ணின் வளம் மேம்படும்

கோடை உழவு செய்த வயலில், அங்கக மற்றும் தொழு உரம் இடுவதினால் மண்ணில் நுண்ணுயிர்கள் எண்ணிக்கை பல்கிப்பெருகி மண்ணின் வளம் மேம்படுத்தப்படுகிறது. கோடை உழவு செய்வதினால் களைக்கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லிகளின் எஞ்சிய நஞ்சு சிதைவுற்று மண்ணிற்கு பாதிப்பில்லாமல் பாதுகாக்கப்படுகிறது. கோடை மழை, வளி மண்டலத்தில் உள்ள வளிமண்டல நைட்ரேட்டுடன் இணைந்து பெறப்படுவதினால் மண்ணின் வளம் மேம்படுத்தப்படுகிறது. கோடை உழவு செய்யும்போது, மண்ணில் உள்ள பூச்சிகள், கூட்டுப்புழுக்கள், அவற்றின் முட்டைகள், பூஞ்சாணம் மற்றும் நோய் பரப்பக்கூடிய பாக்டீரியாக்கள், நூல் புழுக்கள் இவை அனைத்தும் முழுமையாக மண்ணின் மேற்பரப்பிற்கு கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுகிறது.

கோடை உழவின்போது பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய களைகள், அவற்றின் விதைகள் முழுவதுமாக மக்கி மண்ணிற்கு உரமாக மாற்றப்படுகிறது. செங்குத்து மற்றும் சரிவாக உள்ள வயல்களில் குறுக்கும் நெடுக்குமாக கோடை உழவு செய்வதால் மண் அரிமானம் தடுக்கப்பட்டு மண்ணின் வளம் பாதுகாக்கப்படுகிறது. அறுவடை செய்யப்பட்ட வயல்களில் உள்ள அடித்தாள், வேர்கள், கட்டைகள் போன்றவற்றை கோடை உழவின் போது மடக்கி உழுவதால் மண்ணின் அங்ககச்சத்துக்கள் அதிகரிக்கிறது. களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது. பயிருக்கு தீங்கு செய்யக்கூடிய கூட்டுப்புழுக்கள் வெளிக்கொணரப்படும். அவற்றை கொக்கு, நாரை போன்ற பறவைகள் உண்டு அழிக்கின்றன.

உழவன் செயலியில் பதிவு

இத்தகைய கோடை உழவால் பயன்பெறும் வகையில், அனைத்து விவசாயிகளும் தற்போது பெய்துள்ள மழையை பயன்படுத்தி உழவு செய்ய வேண்டும். இதற்காக வேளாண் பொறியியல் துறையின் மூலம் குறைந்த வாடகையில் உழவு செய்திட உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட வேளாண் பொறியியல் துறையின் அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம், என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்