திருவள்ளூர்
பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது குறித்த ஆலோசனை
|பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பது குறித்த ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்தது.
பள்ளிகல்வி துறை சார்பாக பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பது தொடர்பாக ஊராட்சிமன்ற தலைவர்கள் மற்றும் பள்ளி தலைமையாசிரியர்களுடனான ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் ராமன் அனைவரையும் வரவேற்றார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கூறியதாவது:-
பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க வேண்டும். மேலும் பல்வேறு காரணங்களால் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள இடைநிற்றலை தவிர்த்து தொடர்ந்து பள்ளிக்கு வருகை புரிய வைப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக நான் முதல்வன், புதுமைப் பெண் திட்டம், காலை உணவு திட்டம் போன்ற பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து அதை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், ஊராட்சிமன்ற தலைவர்கள் தங்களது பகுதிக்குட்பட்ட பள்ளிகளுக்கு அவ்வப்போது சென்று வருகை பதிவேட்டினை பார்வையிட்டு, இடைநிற்றல் இருப்பின் இதுகுறித்து தலைமையாசிரியரிடம் கலந்தாலோசித்து தொடர்புடைய பெற்றோர்களையும், மாணவர்களையும் தொடர்பு கொண்டு கல்வியின் அவசியத்தை முழுமையாக எடுத்துரைத்து அவர்கள் பள்ளிக்கு வருகை புரிய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.