< Back
மாநில செய்திகள்
குடும்பத்துடன் சுற்றுலா சென்ற போது துணிகரம்: கம்ப்யூட்டர் என்ஜினீயர் வீட்டில் 70 பவுன் நகைகள் திருட்டு - கொள்ளையர்களுக்கு வலைவீச்சு
சென்னை
மாநில செய்திகள்

குடும்பத்துடன் சுற்றுலா சென்ற போது துணிகரம்: கம்ப்யூட்டர் என்ஜினீயர் வீட்டில் 70 பவுன் நகைகள் திருட்டு - கொள்ளையர்களுக்கு வலைவீச்சு

தினத்தந்தி
|
30 Nov 2022 4:32 PM IST

குடும்பத்துடன் சுற்றுலா சென்ற கம்ப்யூட்டர் என்ஜினீயர் வீட்டில் 70 பவுன் நகைகளை கொள்ளையர்கள் திருடிச்சென்றனர்.

சென்னை மேற்கு மாம்பலம், மூர்த்தி தெரு விரிவாக்க பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் சூர்யநாராயணன் (வயது 55). இவர் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். சூர்யநாராயணன் கடந்த 25-ந் தேதி அன்று குடும்பத்துடன் டெல்லிக்கு சுற்றுலா சென்றார். அங்குள்ள வைஷ்ணவி தேவி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இந்த நிலையில் அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் குடும்பத்துடன் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் படுக்கை அறையில் இருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதற்குள் இருந்த சுமார் 70 பவுன் தங்க நகைகள் கொள்ளைபோனது அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்துகொண்ட கொள்ளை கும்பல் பூட்டிக்கிடந்த சூர்யநாராயணன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த அசோக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை நடந்த வீட்டை சோதனை செய்து அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர்.

மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை சேகரித்து கொள்ளையர்களை அடையாளம் கண்டு, வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்