< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்லில் துணிகர சம்பவம்: தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளர் சரமாரி வெட்டிக்கொலை
மாநில செய்திகள்

திண்டுக்கல்லில் துணிகர சம்பவம்: தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளர் சரமாரி வெட்டிக்கொலை

தினத்தந்தி
|
21 July 2023 10:57 AM IST

திண்டுக்கல்லில் 2 வயது மகனுடன் ஸ்கூட்டரில் சென்ற தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

திண்டுக்கல் தீப்பாச்சி அம்மன் கோவில் கொல்லம்பட்டறை பகுதியை சேர்ந்தவர் சரவணன் என்ற பட்டறை சரவணன் (வயது 30). இவர் திண்டுக்கல் கிழக்கு பகுதி தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளராக இருந்தார். இவர் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

இவருக்கு திருமணமாகி பவதாரணி (26) என்ற மனைவியும், வேதமித்ரன் (2) எனும் மகனும் உள்ளனர். இந்த நிலையில் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டி வ.உ.சி.நகருக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். அங்கு ஒரு வாடகை வீட்டில் மனைவி மற்றும் மகனுடன் சரவணன் வசித்து வந்தார். அதோடு சிலுவத்தூர் சாலை குளம் அருகே மீன் வியாபாரம் செய்து வந்தார்.

மேலும் மாலை நேரத்தில் திண்டுக்கல் அண்ணாநகர் பகுதியில் உள்ள மைதானத்தில் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது வழக்கம். அதன்படி நேற்று மாலை சரவணன் தனது மகன் வேதமித்ரனுடன் ஸ்கூட்டரில் அண்ணாநகர் மைதானத்துக்கு சென்றார்.

அங்கு நண்பர்களுடன் அமர்ந்து சிறிது நேரம் பேசி கொண்டிருந்தார். பின்னர் இரவு சுமார் 7.15 மணிக்கு மைதானத்தில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டார். ஸ்கூட்டரின் முன்பகுதியில் மகனை அமர வைத்து கொண்டு சரவணன் ஓட்டி சென்றார். மைதானத்தில் இருந்து சுமார் 50 அடி தூரத்தில் உள்ள ஒரு தெருவில் சென்று கொண்டிருந்தார்.

அந்த தெருவில் இருந்து விவேகானந்தாநகர் மெயின்ரோட்டுக்கு திரும்ப முயன்றார். அப்போது மெயின்ரோட்டில் இருந்து வேகமாக வந்த கார், சரவணனின் ஸ்கூட்டரை மறித்து நின்றது. அதை பார்த்து திடுக்கிட்ட சரவணன் பிரேக் போட்டு ஸ்கூட்டரை நிறுத்தினார்.

அப்போது காரில் இருந்து 4 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இறங்கினர். ஏதோ விபரீதம் நடக்க இருப்பதை உணர்ந்த சரவணன் சுதாரிப்பதற்குள் அந்த கும்பல் அவரை வெட்ட தொடங்கியது. மர்ம கும்பலிடம் இருந்து தப்பிக்க நினைத்த சரவணன், மகனின் மீது வெட்டு விழாமல் தடுக்க முயன்றார்.

இதனால் அவருடைய கைகள், முதுகில் பலத்த வெட்டு விழுந்தது. மேலும் அவரை சூழ்ந்து கொண்ட கும்பல் தலையை குறிவைத்து சரமாரியாக வெட்டியது. இதனால் நிலை குலைந்த சரவணன் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். அதன்பின்னரும் ஆத்திரம் தீராத அந்த கும்பல் தலையை வெட்டி சிதைத்தது.

இதனால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரவணன் துடிதுடித்து இறந்தார். அதன்பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து காரில் தப்பி சென்று விட்டது. இதற்கிடையே தனது கண்முன்னே தந்தை வெட்டப்படுவதை பார்த்த சரவணனின் மகன் வேதமித்ரன் பயத்தில் அலறினான். அவனுடைய அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த சரவணனின் அருகே வேதமித்ரன் அழுது கொண்டிருப்பதை பார்த்தனர்.

அப்போது தெருவின் மற்றொரு முனையில் பதுங்கி இருந்த 3 பேர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் திண்டுக்கல் நகர் போலீஸ் துணை சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன் தலைமையில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும்போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் அங்கு வந்து பார்வையிட்டு விசாரணையை முடுக்கிவிட்டார். போலீஸ் மோப்பநாய் டிம்பி வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இதையடுத்து போலீசார், சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சரவணனின் உடலை பார்த்து அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

மேலும் தி.மு.க.வினர் ஏராளமானோர் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர். நண்பர்கள் சரவணனின் உடலை பார்த்து கண்ணீர் சிந்தினர். இதனால் ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் சோகமயமானது. இந்த சம்பவம் குறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக 7 பேர் கொண்ட கும்பல் சரவணனை கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக தனிப்படை அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல்லில் குடியிருப்பு பகுதியில் தி.மு.க. நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே கொலையாளிகள் ஆயுதங்களுடன் சிவப்பு நிற காரில் தப்பிச் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வடமதுரையில் தென்னம்பட்டி பிரிவு நால்ரோடு சந்திப்பில் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற சிவப்பு நிற கார்களை நிறுத்தி சோதனையிட்டு அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


மகனை தூக்கி வீசிய கொலையாளிகள்

கொலையாளிகள் சரவணனை சூழ்ந்து வெட்ட தொடங்கியதும், சரவணன் தனது மகனுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று நினைத்து அவனை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால் கொலையாளிகளுடன் எதிர்த்து போராட முடியவில்லை. அதை சாதகமாக பயன்படுத்திய கும்பல் அவரை சூழ்ந்து வெட்டியது. மேலும் சரவணனை வெட்டுவதற்கு இடையூறாக இருந்ததால் மகனை பிடுங்கி தூக்கி வீசிவிட்டு அவரை வெட்டி சாய்த்து உள்ளனர். இதனால் அவனுக்கு காயம் ஏற்பட்டது. எனினும் எழுந்து நின்ற அவன் தந்தையின் நிலை கண்டு அழத்தொடங்கினான். சில நிமிடங்களுக்கு முன்பு தன்னை கொஞ்சி மகிழ்ந்த தந்தையை ஒரு கும்பல் வெட்டுவதை பார்த்து பயந்து அவன் அலறி துடித்தான். இறுதியில் மகனின் கண் முன்னே சரவணன் கொலை செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்