< Back
மாநில செய்திகள்
அ.தி.மு.க பெண் கவுன்சிலர் கடத்தப்பட்ட வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

அ.தி.மு.க பெண் கவுன்சிலர் கடத்தப்பட்ட வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தினத்தந்தி
|
21 Feb 2023 2:33 PM IST

அ.தி.மு‌.க பெண் கவுன்சிலர் கடத்தப்பட்ட வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி ரமேஷ் குமார் (வயது 46). இவர் நிலங்களை வாங்கி விற்கும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ரோஜா (44). கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தின் 1-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 24-ந் தேதி பல்லவாடாவில் உள்ள வீட்டில் இருந்து பெண் கவுன்சிலர் ரோஜாவும், அவரது மகன் ஜேக்கப்பும் (22) துப்பாக்கி மற்றும் கத்தி முனையில் முகமூடி அணிந்த மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பான நிலையில் அன்றைய தினம் இரவே அவர்களை கடத்தல்காரர்கள் ஆந்திரா அருகே விடுவித்தனர்.

இது குறித்து பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து 3 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் நில பிரச்சினை தொடர்பான முன்விரோதத்தால் இந்த கடத்தல் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்லவாடாவை சேர்ந்த சுரேந்தர் (24), அவரது நண்பர்களான கும்புளி சேர்ந்த சந்தோஷ் (26), ஆந்திர மாநிலம் சுதிர்பாளையத்தை சேர்ந்த பாஸ்கர் (30), நாகலாபுரத்தை சேர்ந்த நவீன் (28) ஆகிய 4 பேரை கடந்த மாதம் 28-ஆம் தேதி பாதிரிவேடு போலீசார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஆந்திர மாநிலம் ராசப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர் என்பவரை கடந்த மாதம் 31-ந் தேதி பொன்னேரி கோர்ட்டில் சரண் அடைந்தார். இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண் பரிந்துரையின் பேரில் முதல் கட்டமாக மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கைது செய்யப்பட்ட மேற்கண்ட 4 வாலிபர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்திரவிட்டார். இதனையடுத்து சென்னை புழல் சிறையில் உள்ள 4 பேருக்கும் அதற்கான நகலை கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் வழங்கினார்.

மேலும் செய்திகள்