செங்கல்பட்டு
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி அ.தி.மு.க. பிரமுகர் சாவு: கூலிப்படை வைத்து கொன்ற உறவுக்கார பெண் கைது
|4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் அ.தி.மு.க. பிரமுகர் சிகிச்சை பலனின்றி பலியானார். கொலை வழக்கில் உறவுக்கார பெண் கைதானார்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 42), இவர் காட்டாங்கொளத்தூர் வடக்கு அ.தி.மு.க. ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைத் தலைவராக இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி மொபட்டில் தனது மகனை வீட்டின் அருகே உள்ள பள்ளியில் விட்டு விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்த போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் செந்தில்குமாரை வழிமறித்து சரமாரியாக வீச்சு அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த செந்தில்குமாரை பொதுமக்கள் மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் செந்தில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இது தொடர்பாக சென்னை ஜெ.ஜெ. நகர் பகுதியை சேர்ந்த செந்தில்குமாரின் உறவினர் விஜயலட்சுமி (40), என்ற பெண்ணை கைது செய்தனர்.
அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் கூலிப்படையை வைத்து செந்தில்குமாரை வெட்டி கொலை செய்ததாக விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். இதையடுத்து கைது செய்யப்பட்ட விஜயலட்சுமியை செங்கல்பட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிபதி சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.