திண்டுக்கல்
கார் டிரைவரை கொலை செய்த வழக்கில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கைது
|ஒட்டன்சத்திரம் அருகே கார் டிரைவரை கொலை செய்த வழக்கில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கைது செய்யப்பட்டார்.
ஒட்டன்சத்திரம் அருகே, கார் டிரைவரை கொலை செய்த வழக்கில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கைது செய்யப்பட்டார்.
கார் டிரைவர் கொலை
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அம்பிளிக்கையை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 28). இவர், அப்பகுதியில் உள்ள நெய் தயாரிக்கும் நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை செய்து வந்தார். இதேபோல் பணம் வசூல் செய்யும் பணியையும் அவர் செய்தார்.
இந்தநிலையில் அந்த நிறுவனத்தில் சுரேஷ்குமார் ரூ.6 லட்சத்தை கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்ததும் அதே நிறுவனத்தில் பணியாற்றும் சுரேஷ்குமாரின் உறவினர் வடிவேலு தட்டிக்கேட்டார். மேலும் பணத்தை திருப்பி கொடுக்குமாறு கூறினார். இதில் ஏற்பட்ட தகராறில் சுரேஷ்குமாரை வடிவேலு மற்றும் சிலர் சேர்ந்து அடித்துக்கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை போலீசாருக்கு தெரியாமல் அம்பிளிக்கையில் உள்ள மயானத்தில் எரித்துவிட்டனர்.
போலீசில் வாக்குமூலம்
இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி ஆனந்தன், அம்பிளிக்கை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு ெசய்து விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர், அப்பகுதியில் பதுங்கியிருந்த வடிவேலுவை கைது செய்தனர். அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சுரேஷ்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய அம்பிளிக்கையை சேர்ந்த மனோகரன், பாண்டி, தேனியை சேர்ந்த சிவஞானம், நிலக்கோட்டையை சேர்ந்த சதீஷ்குமார், திருப்பூரை சேர்ந்த முத்துக்குமார் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஒன்றிய செயலாளர் கைது
இதற்கிடையே சுரேஷ்குமார் கொலையில், நெய் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரும், ஒட்டன்சத்திரம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளருமான நடராஜனுக்கு தொடர்பு இருப்பதாக வடிவேலு வாக்குமூலம் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் நடராஜனை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் அவர் சென்னையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் சென்னை சென்றனர். அங்கு கோயம்பேடு பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த நடராஜனை போலீசார் கைது செய்தனர்.