< Back
மாநில செய்திகள்
திருவொற்றியூரில் இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்ய முயன்ற அ.தி.மு.க. பிரமுகர் - புதுச்சேரியில் போலீசார் மீட்டனர்
சென்னை
மாநில செய்திகள்

திருவொற்றியூரில் இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்ய முயன்ற அ.தி.மு.க. பிரமுகர் - புதுச்சேரியில் போலீசார் மீட்டனர்

தினத்தந்தி
|
24 March 2023 2:52 PM IST

இளம்பெண்ணை காரில் புதுச்சேரிக்கு கடத்திச்சென்று கட்டாய திருமணம் செய்ய முயன்ற அ.தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர். இளம்பெண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை திருவொற்றியூர் பாலகிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன் (வயது 28). திருவொற்றியூர் மேற்கு பகுதி அ.தி.மு.க. மாணவரணி செயலாளரான இவர், சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார்.

அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதான எம்.பி.ஏ. பட்டதாரியான இளம்பெண் ஒருவர், பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அந்த இளம்பெண், கோகுலகிருஷ்ணனிடம் பழகுவதை தவிர்த்தார். செல்போனில் பேசுவதையும் நிறுத்திவிட்டதாக தெரிகிறது.

இதனால் கோபமடைந்த கோகுலகிருஷ்ணன், தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து கடந்த 21-ந் தேதி காலை வீட்டில் இருந்து வெளியே வந்த இளம்பெண்ணின் கையை பிடித்து இழுத்து வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச்சென்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் பெற்றோர், சாத்தாங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் பிரம்மானந்தம் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் தனிப்படை அமைத்து கடத்தப்பட்ட இளம்பெண்ணை தேடி வந்தனர்.

இந்தநிலையில் புதுச்சேரியில் கோட்டைகுப்பம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் கடத்தப்பட்ட இளம்பெண்ணுடன், கோகுலகிருஷ்ணன் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்ற தனிப்படை போலீசார், இருவரையும் மீட்டு சாத்தாங்காடு போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.

விசாரணையில் அந்த இளம்பெண், தனது விருப்பம் இல்லாமல் கோகுலகிருஷ்ணன் தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்வதற்காக புதுச்சேரிக்கு காரில் கடத்திச் சென்றதாக போலீசாரிடம் கூறினார். இதையடுத்து கோகுல் கிருஷ்ணன் மீது போலீசார் ஆள்கடத்தல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்