மின்கட்டண உயர்வை கண்டித்து இன்று அதிமுக சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்!
|மின்கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தில் இன்று காலை அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
சென்னை,
மின்கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தில் இன்று காலை அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். செங்கல்பட்டில் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார்.
மின்கட்டண உயர்வை கண்டித்து இன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கியுள்ள திமுக அரசை கண்டித்தும், அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும் (16.09.2022) வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.