இடைத்தேர்தலில் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் - பாஜக தலைவர் அண்ணாமலை
|இடைத்தேர்தலில் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை,
பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
எப்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதோ அப்போதே பாஜக கட்சி தலைவராக நான் தெளிவாக ஒரு விஷயத்தை கூறி இருந்தேன். கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் இந்த தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.
குறிப்பாக, அசுர பணபலம், படைபலத்தை எதிர்க்க வேண்டுமென்றால் ஒரு வேட்பாளர் நிறுத்தப்படவேண்டுமென்று தொடர்ந்து கூறினோம். அதன்பின்னர், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வத்திடம் தொலைபேசியில் பாஜக தேசிய தலைவர் அறிவுறுத்தலின் பெயரில் கடந்த 8 நாட்களில் நான் பல முறை பேசியுள்ளேன்.
கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் நமது கூட்டணியில் அதிமுக போட்டியிடவேண்டும், அதுவும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவேண்டும் என்பதற்காகத்தான் பாஜக கடந்த 8 நாட்களாக பல முயற்சிகளை கையில் எடுத்து பேசினோம்.
குறிப்பாக, எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பாக தொலைபேசியில் என்னை அழைத்து 31-ம் தேதி வரை நான் காத்திருக்கிறேன். அதன் பின் நான் வேட்பாளரை அறிவிக்கப்போகிறேன் என்று கூறி அறிவித்தார்.
ஈபிஎஸ் வேட்பாளரை அறிவித்ததால் நானும் வேட்பாளரை அறிவிக்கிறேன் என்று ஓபிஎஸ்-ம் வேட்பாளரை அறிவித்தார்.
இந்த எல்லா நேரத்திலும் பாஜகவின் உறுதியான நிலையான நிலைப்பாடு என்னவென்றால், கூட்டணி கட்சியின் உட்கட்சி பிரச்சினைகளில் தலையிடமாட்டோம் என்பது எங்கள் உறுதியான நிலைப்பாடாக உள்ளது. இவை அனைத்தையும் பொறுமையாக பார்த்துக்கொண்டிருந்தோம்.
ஒரு வேட்பாளர், வலிமையான வேட்பாளர் நிறுத்தப்படவேண்டும் என்ற எங்கள் எண்ணத்தில் துளியும் சந்தேகம் இல்லாமல் பயணித்தோம்' என்றார்.