விழுப்புரம்
விழுப்புரத்தில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல்
|விளம்பர பதாகை அகற்றப்பட்டதை கண்டித்து விழுப்புரத்தில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்
விளம்பர பதாகை அகற்றம்
மதுரையில் வருகிற 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அ.தி.மு.க. சார்பில் எழுச்சி மாநாடு நடக்கிறது. இம்மாநாட்டையொட்டி விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகில் நகர செயலாளர் பசுபதி, மாவட்ட பேரவை துணை செயலாளர் திருப்பதி பாலாஜி உள்ளிட்டோர் விளம்பர பதாகைகளை வைத்திருந்தனர்.
இந்த விளம்பர பதாகைகளை போலீஸ் டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக் உத்தரவின்பேரில் விழுப்புரம் மேற்கு போலீசார் நேற்று முன்தினம் இரவு அகற்றியதாக தெரிகிறது. இதையறிந்ததும் நேற்று காலை 10 மணியளவில் அ.தி.மு.க.வினர், மேற்கு போலீஸ் நிலையத்திற்கு திரண்டு சென்று அங்கிருந்த போலீசாரிடம் ஏன் விளம்பர பதாகைகளை அகற்றினீர்கள் எனக்கேட்டு வாக்குவாதம் செய்தனர்.
அ.தி.மு.க.வினர் சாலை மறியல்
பின்னர் நான்குமுனை சந்திப்பு அருகில் நகர செயலாளர்கள் பசுபதி, ராமதாஸ் ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அங்குள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
இதில் மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் டாக்டர் முத்தையன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சக்திவேல், நகர கூட்டுறவு வங்கி தலைவர் தங்கசேகர், நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், மாவட்ட பேரவை துணை செயலாளர் பாலாஜி, நகரமன்ற கவுன்சிலர்கள் கோதண்டராமன், ஆவின்செல்வம், கலை, கோலியனூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் திருமலை, பொதுக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், வக்கீல்கள் சுபாஷ்தமிழரசன், மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் மின்னல் சைவுக், நகர மாணவர் அணி செயலாளர் அன்பு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அ.தி.மு.க.வினர், மதுரை மாநாடு தொடர்பாக கடந்த 11-ந் தேதி முதல் விளம்பர பதாகை வைத்துக்கொள்வதாக 7-ந் தேதி மேற்கு போலீஸ் நிலையத்தில் முறையாக அனுமதி கடிதம் கொடுத்துதான் வைத்தோம். எங்களிடம் தகவல் தெரிவிக்காமல் ஏன் அகற்றினீர்கள், முன்கூட்டியே தகவல் சொல்லியிருந்தால் நாங்களே அகற்றியிருப்போம். இங்குள்ள 2 பயணியர் நிழற்குடையிலும் தி.மு.க. விளம்பர பதாகைகள் 2 ஆண்டுகளாக உள்ளது, அதை ஏன் அகற்றவில்லை. அ.தி.மு.க. விளம்பர பதாகையை மட்டும் அகற்ற வேண்டியதன் அவசியம் என்ன? என்று கூறி போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், எந்தவித கட்சி பாகுபாடும் பார்க்காமல் பணியாற்றி வருகிறோம். மீண்டும் அனுமதி கடிதம் கொடுத்துவிட்டு விளம்பர பதாகையை வைத்துக்கொள்ளுங்கள். தி.மு.க. விளம்பர பதாகையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதை ஏற்று அ.தி.மு.க.வினர், மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு காலை 10.30 மணியளவில் போக்குவரத்து சீரானது.