< Back
மாநில செய்திகள்
கர்நாடக, தமிழக அரசுகளை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

கர்நாடக, தமிழக அரசுகளை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
7 Oct 2023 12:45 AM IST

தண்ணீரின்றி கரும் பயிர்களை காப்பாற்ற போதிய அளவு தண்ணீர் திறக்க வலியுறுத்தியும், கர்நாடக, தமிழக அரசுகளை கண்டித்தும் மயிலாடுதுறையில், அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டார்.

மயிலாடுதுறை;

தண்ணீரின்றி கரும் பயிர்களை காப்பாற்ற போதிய அளவு தண்ணீர் திறக்க வலியுறுத்தியும், கர்நாடக, தமிழக அரசுகளை கண்டித்தும் மயிலாடுதுறையில், அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டார்.

ஆர்ப்பாட்டம்

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு போதிய அளவு காவிரி நீரை பெற முயற்சி மேற்கொள்ளாத தமிழக அரசை கண்டித்தும், குறுவை சாகுபடியை காப்பீட்டு திட்டத்தில் சேர்க்காமல் உள்ளதை கண்டித்தும் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்தும் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பவுன்ராஜ் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராதாகிருஷ்ணன், தெற்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார், நகரசெயலாளர் செந்தமிழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நீரின்றி வாடும் பயிர்கள்

மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாரதி வரவேற்று பேசினார். முன்னாள் அமைச்சரும், ஜெயலலிதா பேரவை மாநில செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. பேசினாா். அப்போது அவர் கூறியதாவது:-வானிலை அறிக்கை தகவல்களை பெற்று, பருவ மழையை கணக்கில் கொண்டு அதன் அடிப்படையில் தான் மேட்டூர் அணையில் இருந்து படிப்படியாக தண்ணீரை திறந்து இருக்க வேண்டும். ஆனால் எவ்வித முன்அறிவிப்பையும் பெறாமல் தண்ணீர் திறந்ததால் தற்போது மேட்டூரில் தண்ணீரின் அளவு மிகவும் குறைந்து விட்டது. இதனால் தற்போது டெல்டா மாவட்டங்களில் நெற் பயிர்கள் நீரின்றி வாடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவா் கூறினார்.

பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலம்

தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தமிழர்களின் உரிமைகள் காவு கொடுக்கப்படும். கர்நாடக அரசு மேகதாதுவில் 67 டி.எம்.சி. நீரை சேமிக்கும் வகையில் அணை கட்டி விட்டால் தமிழ்நாட்டுக்கு முற்றிலும் தண்ணீர் கிடைக்காது. டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும். விவசாயிகளுக்கு ரூ.16 ஆயிரம் கோடி வறட்சி நிவாரணமாக வழங்கியது அ.தி.மு.க. அரசு.தமிழகத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்து கையெழுத்திட்டவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் தமிழகத்தை பாலைவனமாக்கும் வகையில் மீத்தேன் திட்டத்தில் கையெழுத்திட்டவர் தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின். இவ்வாறு அவர் கூறினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் செல்லையன், கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நற்குணன், மாநில இளைஞரணி இணை செயலாளர் கோமல் அன்பரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் மணக்குடி எம்.ஆர்.எஸ். சங்கர் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்