மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு-எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் இன்று ஆர்ப்பாட்டம்
|மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
சென்னை,
தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வு முடிவு அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் என்றும், அதைக்கண்டித்து தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை போராட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி, அ.தி.மு.க.வினர் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், சென்னையில் இன்று அ.தி.மு.க. சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை 10 மணிக்கு சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஆர்ப்பாட்டத்துக்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார்.
ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அவர் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் உரையாற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு முதன் முதலாக நடத்தப்படும் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் இதுவாகும். எனவே இன்று நடக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு உள்ளனர். அ.தி.மு.க. தொண்டர்கள் சுமார் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் வரை ஆர்ப்பாட்டத்துக்கு வருவார்கள் என்று கூறப்படுகிறது.